Watch: ஜான்டி ரோட்ஸ்போல காற்றில் பறந்த ரவி பிஷ்னோய்… பவுண்டரியை தடுத்து அபார ஃபீல்டிங்! வைரல் வீடியோ!
லிவிங்ஸ்டன் கட் செய்து ஆஃப் சைடில் அடிக்க, பேக்வர்ட் பாயிண்ட் திசையில் நின்றிருந்த ரவி பிஷ்னோய் ஜான்டி ரோட்ஸ்போல பாய்ந்து காற்றில் பறந்தார்.
மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் காட்டிய அதிரடியால் பந்துகள் நாலாப்புறமும் சிதற, லக்னோ அணியின் ஸ்கோர் இமாலய உயரத்தை எட்டியது. 8-வது ஓவரில் 100, 16-வது ஓவரில் 200 என்று ஆரம்பத்தில் இருந்தே ரன்ரேட்டை கொஞ்சமும் குறைய விடாமல், இந்திவ் பவுலரையும் விட்டு வைக்காமல் தாக்கினர் லக்னோ அணியினர். இதனால் அணியின் ரன் எண்ணிக்கை 250-ஐ கடந்தது. இதனால் ஆர்சிபி அணியின் சாதனை ஸ்கொரான 263-க்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தை காட்டிய லக்னோ அணியினர் 6 ரன் பின்தங்கி 257-இல் முடித்தனர்.
இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரைக் குவித்த அவர்கள் இந்த ஹை ஸ்கோரிங் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினர்.
எப்படி போட்டாலும் அடித்த லக்னோ
இந்த போட்டியில் அதிரடி காண்பித்த கைல் மேயர்ஸ் (24 பந்துகளில் 54) மற்றும் ஸ்டோய்னிஸ் (40 பந்துகளில் 72) ஆகியோரின் மிருகத்தனமான தாக்குதலால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்களை எட்டி முதல் இன்னிங்சிலேயே கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்தது. மேயர்ஸ் மற்றும் ஸ்டோய்னிஸ் மட்டுமின்றி, ஆயுஷ் பதோணியும் தன் பங்குக்கு அதிரடி காண்பித்து செல்ல, பூரான் மளமளவென 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்துவிட்டு கேட்சிற்காக எடுக்கப்பட்ட டிஆர்எஸ்ஸில், எல்பிடபிள்யு முறையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
போராடித் தோற்ற பஞ்சாப் அணி
தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. என்னதான் 200-ஐ தாண்டும் அதிரடி காட்டினாலும் அது, லக்னோ அணியின் இமாலய ஸ்கோரை எட்ட உதவவில்லை. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே தேவையான ரன் விகிதம் 13 இல் இருந்ததால் இலக்கை எட்ட முடியாமல் போனது. பஞ்சாப் அணி சார்பில் அதர்வா டைடே 33 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். அவர்கள் அணியின் முக்கிய வீரர்கள் ரன் குவிக்க தவறிய நிலையில், லிவிங்ஸ்டன் (22 பந்தில் 36) சிக்கந்தர் ராசா (14 பந்தில் 23) போன்றவர்கள் கிடைத்த ஸ்டார்ட்டை பெரிய ஸ்கோராக மாற்ற தவறினர். இளம் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூர் 4 ஓவர்களில் 4/37 என்ற எண்ணிக்கையில் பந்து வீசி அசத்தினார். எட்டு ஆட்டங்களில் LSG இன் ஐந்தாவது வெற்றி இது, பஞ்சாப் கிங்ஸ் எட்டு ஆட்டங்களில் நான்காவது தோல்வியை சந்தித்தது.
There you go 🙌🙌@LucknowIPL #TATAIPL https://t.co/BtR4cyxldc pic.twitter.com/zna1mhM5YS
— IndianPremierLeague (@IPL) April 28, 2023
காற்றில் பறந்த ரவி பிஷ்னோய்
இந்த இரண்டாவது இன்னிங்சின்போது பஞ்சாப் அணி தங்களால் முடிந்த அளவுக்கு அடித்து ஆட முயற்சிக்க, பந்துவீச்சாளரகள் சிறப்பாக பந்து வீசியதால் பவுண்டரிகளை குவிக்க தடுமாறினர். ஒருபுறம் பந்துவீச்சாளர்கள் என்றால் மறுபுறம் ஃபீல்டர்களும் பஞ்சாப் அணிக்கு தலைவலியை தந்தனர். அதிலும் குறிப்பாக, துடிப்பான ஃபீல்டிங்கை வழங்கிய ரவி பிஷ்னோய் லிவிங்ஸ்டன் அடித்த ஒரு பந்தை காற்றில் சீறிப்பாய்ந்து தடுக்க அரங்கம் ஆரவாரம் செய்தது.
15வது ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட லியம் லிவிங்ஸ்டன் கட் செய்து ஆஃப் சைடில் அடிக்க, பேக்வர்ட் பாயிண்ட் திசையில் நின்றிருந்த ரவி பிஷ்னோய் ஜான்டி ரோட்ஸ் போல பாய்ந்து காற்றில் பறந்தார். பந்தை கையில் பிடித்த அவர் கீழே விழுந்த அதிர்வில் பந்தை விட்டார். இருப்பினும் ஃப்ரேமிலேயே இல்லாத அவர், அந்த பவுண்டரியை தடுத்ததே பெரிய விஷயம்தான். அதனைக் கண்ட பேட்ஸ்மேன் லிவிங்ஸ்டன்னே புன்னகைத்தார். இந்த வீடியோவை வெளியிடுமாறு லக்னோ அணி ட்விட்டர் ஹேண்டில் ஐபிஎல் இடம் கேட்க, அவர்களும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.