Dhoni Chepauk: 1400 நாட்களுக்குப் பின் சேப்பாக்கத்தில் தல தோனி.. ரசிகர்களுக்காக சொன்னது இதுதான்?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் களமிறங்கி, தோனி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் களமிறங்கி, தோனி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதிர்ந்த சேப்பாக்கம்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் 3 ஆண்டுகளுக்குப் பின் சென்னை அணி களமிறங்கியது. போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தோனி பேச வந்தபோது, ரசிகர்கள் ”தோனி தோனி” என முழங்க மைதானமே அதிர்ந்தது. தோனி மைக் வைத்து பேசியது கூட, ரசிகர்களின் கரகோஷத்தால் சரியாக கேட்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கியதும் ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு தோனிக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
— Main Dheet Hoon (@MainDheetHoon69) April 3, 2023
தோனி பேச்சு:
சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது குறித்து பேசிய தோனி “சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மீண்டும் வந்தது என்பது எங்களுக்கு மிகப்பெரிய விஷயம். 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கினாலும், நாங்கள் இங்கு அதிகமாக விளையாடவில்லை. 5 முதல் 6 சீசன்களை மட்டுமே நாங்கள் இங்கு விளையாடினோம். சேப்பாக்கம் மைதானம் முழுமையாக செயல்படுவது இதுதான் முதல்முறை. முன்பு சில அரங்குகள் காலியாக இருந்தன. எங்களுக்கான உள்ளூர் போட்டிகள் அனைத்தையும் சேப்பாக்கத்தில் விளையாடுவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இது எங்களுக்கு பெரிய விஷயமும் கூட” என தோனி நெகிழ்ச்சியாக பேசினார்.
தோனியின் விருப்பம்:
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதியில் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற போகிறீர்களா என தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. என்னை தத்தெடுத்துக்கொண்ட சென்னை அணி ரசிகர்களுக்கு முன்பாக எனது கடைசி சீசனை விளையாடுவது தான், எனது கனவு என தோனி தெரிவித்து இருந்தார். அதை நிறைவேற்றும் வகையில் நடப்பு தொடரில் சென்னை அணியின் அனைத்து உள்ளூர் போட்டிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றனர். ஐபிஎல் தொடரில் தோனி விளையாடும் கடைசி தொடர் இது எனவும் கூறப்படுகிறது. இதனால் போட்டியை காண மைதானத்தில் ரசிகர்கள் குவிந்துள்ள நிலையில், நடப்பு தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்ய சென்னை அணிக்கு இதைவிட சிறந்த தருணம் கிடைக்காது என்பது தான் உண்மை.
2019ல் சென்னை:
கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சிஎஸ்கே அணி விளையாடி இருந்தது. அதன் பிறகு சுமார் 1400 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில், உள்ளூர் ரசிகர்களுக்கு மத்தியில் சென்னை அணி களமிறங்கியது. 2008ம் ஆண்டுக்கும் பிறகு முதல்முறையாக புதுப்பிக்கப்பட்ட சேப்பாக்கம் மைதானத்தின் அனைத்து அரங்குகளிலும் தற்போது ரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.