Watch: கடவுளாக பார்க்கும் ரசிகர்கள்… மைதானமெங்கும் மஞ்சள்… தோனிக்காக சிறப்பு வீடியோவை வெளியிட்ட ஐபிஎல்!
ஆட்டம் முடிந்ததும் ட்ரெஸ்ஸிங் ரூம் சென்று தன் அணியினருடன் மட்டும் உரையாட மாட்டார்… வளரும் இளம் வீரர்களுடன் தன் நுணுக்கங்களை பகிர்ந்து கொள்வார்.
ஒரு விளையாட்டு வீரரின் காலில் விழுகிறார்கள் என்றால் அவர் எவ்வளவு விஷயங்களை அந்த விளையாட்டில் சாதித்திருப்பார் என்று புரிந்துகொள்ள முடியும். காலில் விழுதல் போற்றுதலுக்குரிய விஷயம் இல்லை என்றாலும், ஒவ்வொரு ரசிகனும் அவரை வைத்திருக்கும் இடத்தை அதன் மூலம் புரிந்துகொள்ள முடியும். அந்த வீரர் 41 வயதில் என்ன செய்துகொண்டிருப்பார் என்றால், வெறுமனே போட்டியை மட்டும் விளையாடிக்கொண்டிருக்க மாட்டார். விளையாடும்போது பலமுறை அவர் செயல்திறன் மூலம் ஆச்சர்யப்படுத்துவார்.
இன்றும் அசரவைக்கும் செயல்திறன்
வேகமான ஸ்டம்பிங் செய்து அதிர வைக்கும் அவர் வந்த முதல் பந்தில் சிக்ஸர் அடிப்பார், இன்னிங்ஸ் முடிந்ததும் நடந்து செல்ல மாட்டார், ஓடிச்சென்று கீப்பிங்கிற்கு தயாராவார்… இதற்கெல்லாம் மேல் ஆட்டம் முடிந்ததும் ட்ரெஸ்ஸிங் ரூம் சென்று தன் அணியினருடன் மட்டும் உரையாட மாட்டார்… வளரும் இளம் வீரர்களுடன் தன் நுணுக்கங்களை பகிர்ந்து கொள்வார். இதுவே அவரை அந்த அளவுக்கு உயர்த்துகிறது. எம்எஸ் தோனி என்னும் அவர் பெயரை வானளவுக்கு கொண்டு சேர்த்திருக்கிறது.
இதுவே கடைசி தொடரா?
அதனை கொண்டாடும் ரசிகர்களின் உற்சாகத்தையே கடந்த ஒரு மாத காலமாக நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ரசிகர்கள் கடவுளாக பார்க்கும் தல தோனிக்கு இது கடைசி சீசன் என்ற சந்தேகம் அவரை இன்னும் கொண்டாடி தீர்க்க வைக்கிறது. ஆனால் இதுவரை இதுதான் கடைசி தொடர் என்று வெளிப்படுத்தவில்லை. அணியினர் கூறுவது படி பார்த்தால் அவர்களிடமும் அது குறித்து பேசவில்லை. இருப்பினும் அவர் தற்போதே பலரால் கடவுளாக பார்க்கப்படும் நிலையை அடைந்து விட்டதால், 'முறைதான் ஒரு முறைதான் உன்னை பார்த்தால் அது வரமே' என்று மைதானங்களில் காத்துக் கிடக்கின்றனர் ரசிகர்கள். இதனை போற்றும் வகையில் ஐபிஎல் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு வீடியோவை தோனி ரசிகர்களுக்காக சமர்ப்பணம் செய்துள்ளது.
Rain 🌧 or sunshine ☀️
— IndianPremierLeague (@IPL) May 4, 2023
The admiration for MS Dhoni and sea of Yellove is constant 💛😉#TATAIPL | #LSGvCSK | @msdhoni pic.twitter.com/0ZYiv1LQUl
இதற்காக தோனி செய்தது என்ன?
அந்த வீடியோவில், "மழையோ, வெயிலோ, தோனி மீதான ஈர்ப்பு என்பது எப்போதும் நிலையானது" என்று எழுதப்பட்டு பகிரப்பட்டது. 41 வயதான தோனி இதுவரை 243 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 52 ரன்களை விளாசியுள்ளார். அதில் 24 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரு போட்டியில் தோனி 84 ரன்களை விளாசியுள்ளார். அதில் 4 முறை கோப்பையையும் வென்று தந்துள்ளார். ஐ.பி.எல். மட்டுமின்றி இந்திய அணிக்காகவும், சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த பினிஷராக தோனி திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பையை கடைசியாக வென்று தந்தவரும், டி20 உலகக்கோப்பையை முதலில் வென்றவரும் அவரே என்பது அவர் பெயர் சொல்லும் வரலாறு.