IPL Rajat Padithar : சிங்கங்களின் கோட்டையில் சீறிய ரஜத்படிதார்... யார் இந்த இளம்சிங்கம்?
ஐ.பி.எல். எலிமினேட்டர் சுற்றில் தனது அபார அதிரடி சதத்தால் ரஜத் படிதார் அனைவரையும் தன்னை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
டாடா ஐ.பி.எல்.லின் 15வது தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், எலிமினேட்டர் சுற்றில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் லக்னோ அணியை எதிர்கொண்டு ஆடியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபையர் 2ம் சுற்று போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் முதல் ஓவரிலே பெங்களூர் கேப்டன் டுப்ளிசிஸ் ரன் ஏதுமின்றி அவுட்டாக, ஒன் டவுன் வீரராக இளம் வீரர் ரஜீத் படிதார் களமிறங்கினார். கோலி, மேக்ஸ்வெல் திருவிழா காட்டுவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ரஜத் படிதார் அதிரடி திருவிழா காட்டினார். அவர் 54 பந்துகளில் 12 பவுண்டரி 7 சிக்ஸருடன் 112 ரன்கள் எடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
29 வயதான ரஜத் படிதார் மத்திய பிரதேசத்தில் பிறந்தவர். இவரை தொடக்கத்தில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. பெங்களூர் அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்ட லுவ்னித் சிசோடியாவுக்கு பதிலாக மாற்று வீரராக பெங்களூர் அணிக்காக 20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். வலது கை பேட்ஸ்மேனான ரஜத் படிதார் ஜூன் 1-ந் தேதி 1993ம் ஆண்டு பிறந்தவர்.
மத்திய பிரதேசம் 19 வயதுக்குட்பட்டோர் அணி, மத்திய பிரதேச அணி, மத்திய பிரதேச 22 வயதுக்குட்பட்டோர் அணிக்காக ஆடிய ரஜத் படிதார் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அவரது அபார திறமையை கண்ட பெங்களூர் நிர்வாகம் கோலியின் ஆஸ்தான இடமான ஒன் டவுனில் அவரை களமிறக்கியது.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ரஜத் படிதார் இந்த சீசனில் மட்டும் இதுவரை 7 போட்டிகளில் 6 இன்னிங்சில் பேட்டிங் செய்து 1 சதம், 1 அரைசதத்துடன் 275 ரன்களை குவித்துள்ளார். டுப்ளிசிஸ், கோலி, மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் ரஜத் படிதாரும் பெங்களூர் அணியின் புதிய ஸ்டாராக மாறியுள்ளார்.
ரஜத் படிதார் முதல்தர போட்டியிலும் சிறப்பாக ஆடியுள்ளார். அவர் இதுவரை 39 முதல்தர டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7 சதங்கள், 14 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 588 ரன்களும், முதல்தர ஒருநாள் போட்டியில் 43 போட்டிகளில் 3 சதங்கள், 5 அரைசதங்களுடன் 1,481 ரன்களும் குவித்துள்ளார். இதுவரை மொத்தமாக 38 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம் 8 அரைசதங்களுடன் 1,136 ரன்களை குவித்துள்ளார்.
இந்திய அணிக்காக நேரடியாக சர்வதேச போட்டிகளில் ஆடாமல் ப்ளே ஆப் போட்டியில் சதமடித்த முதல் இந்தியர் என்ற அரிய சாதனையையும் ரஜத் படிதார் நேற்று படைத்துள்ளார். ரஜத் படிதாரின் அற்புதமான ஆட்டம் அடுத்தடுத்த போட்டிகளில் தொடரும் என்று பெங்களூர் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்