IPL SRH vs DC: வாழ்வா சாவா ஆட்டத்தில் டெல்லி - ஹைதராபாத்... டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு..!
IPL 2023, Match 34, SRH vs DC: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
16வது சீசன் ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் தங்களது முழு பலத்தினை பயன்படுத்தி மல்லுகட்டி வரும் நிலையில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருந்து முன்னேறுவதற்காக இன்று சன்ரைசர்ஸ் ஹைதரபாத் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
டாஸ்:
ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த சீசன் தொடங்கியது முதல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகளாக சன்ரைசர்சும், டெல்லி அணியும் உள்ளது. இது இரு அணி வீரர்களுக்கும், ரசிகர்களுக்குமே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ள வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமின்றி இனி வரும் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். 5 தோல்விகளை தொடர்ச்சியாக பெற்ற டெல்லி அணி கடந்த போட்டியில்தான் தன்னுடைய முதல் வெற்றியை பெற்றது. சன்ரைசர்ஸ் அணி இதுவரை 2 வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. நடப்புத் தொடரில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ள அணிகள் எனும் அளவிற்கு இந்த இரு அணிகளும் உள்ளன.
பேட்டிங், பவுலிங்:
பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் ஆகியவற்றை கடந்து ஒரு அணியாக தன்னம்பிக்கை அளவில் இரு அணி வீரர்களும் மிகவும் மோசமாக உள்ளனர். இது எதிர்வரும் போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், தன்னம்பிக்கை அளவை இரு அணிகளும் மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
டெல்லி அணியை பொறுத்தவரை கேப்டன் வார்னர் எதிரணி வீரர்களுக்கு சவாலக உள்ளார். டெல்லி அணியில் வார்னருடன் மார்ஷ், மணீஷ் பாண்டே, ரோவ்மென் பாவெல், லலித்யாதவ், ரோசொவ் ஆகியோர் உள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக ஆடினால் மட்டுமே டெல்லி வெற்றி பெற முடியும். ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். இன்றைய போட்டியிலும் அவர் அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம். டெல்லி அணியின் பந்துவீச்சில் கலீல் அகமது, பிரியம்கார்க், யஷ்துல், முகேஷ் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் ஆகும். சுழலில் அக்ஷர் படேல், குல்தீப்யாதவ் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ்:
முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் அணி சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆடியபோது அவர்களது உடல்மொழி ஹைதரபாத் ரசிகர்களுக்கு மட்டுமின்றி மற்ற அணி ரசிகர்களுக்குமே சோகத்தை ஏற்படுத்தியது. போராட்ட குணமின்றி தோல்வி மனப்பான்மையை அவர்களது உடல்மொழியே காட்டியது. இந்த போட்டியில் அவர்கள் அதை மாற்ற வேண்டியது அவசியம் ஆகும்.
கேப்டன் மார்க்ரம், கிளாசென், ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால் ஆகியோர் கட்டாயமாக அதிரடியாக ஆட வேண்டியது அவசியம். ராகுல் திரிபாதி, அபிஷேக்சர்மாவும் கண்டிப்பாக பேட்டிங்கில் அசத்த வேண்டும். மயங்க் அகர்வால் தொடர்ந்து சொதப்பி வரும் சூழலில், இன்றைய போட்டியில் கட்டாயம் சிறப்பாக ஆட வேண்டும். மயங்க் அகர்வாலின் பேட்டிங் வரிசை எது என்பதை அணி நிர்வாகம் சரியாக முடிவு செய்ய வேண்டும்.
பந்துவீச்சில் உம்ரான்மாலிக், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜென்சன், மார்கண்டே, நடராஜன் ஆகியோர் சிறப்பாக பந்துவீச வேண்டியதும் அவசியம் ஆகும்.