IPL 2024: பெங்களூரு அணியைப்போல் எந்த அணிக்கும் ரசிகர் பட்டாளம் இல்லை - இர்ஃபான் பதான் புகழாரம்
விராட் கோலி கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகின்றார்.
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் மிகப் பெரிய லீக் போட்டியான ஐபிஎல் கிரிக்கெட் மீது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு தனி ஈர்ப்பே உள்ளது. ஐபிஎல் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை ஐபிஎல் போட்டி மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
நடப்பு ஐபிஎல் லீக்கில் மொத்தம் 10 அணிகள் களமிறங்கவுள்ளது. ஐபிஎல் கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு 17வது சீசன் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடங்கபட்ட காலத்தில் இருந்து அங்கம் வகிக்கும் பெங்களூரு அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. பெங்களூரு அணி மட்டும் இல்லாமல் பஞ்சாப், டெல்லி அணிகளும் இன்னும் ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை. கடந்த இரண்டு சீசன்களாக விளையாடி வரும் லக்னோ அணியும் இன்னும் ஒரு கோப்பையைக் கூட வென்றதில்லை. ஆனால் கடந்த இரண்டு சீசன்களில் குஜராத் அணி இறுதிப் போட்டி வரை சென்றது மட்டும் இல்லாமல், தனது அறிமுக தொடரில் கோப்பையை வென்று அசத்தியது.
இப்படியான நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒரு கோப்பையைக் கூட வென்றதில்லை. பெங்களூரு அணியில் விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டிவிலியர்ஸ் போன்ற ஜாம்பவான்கள் இருந்த போதுகூட அந்த அணியால் ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி குறித்தும் பெங்களூரு அணி குறித்தும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்ஃபான் பதான் பேசியுள்ளார். அதில், ”ஆர்சிபி மற்றும் ஆர்சிபியின் ரசிகர்களைப் போன்ற ஒரு ஃப்ரான்சைஸ்-ரசிகர் உறவை நான் பார்த்ததில்லை. உலகம் முழுவதிலும் அவர்களுக்கு மிகவும் விசுவாசமான ரசிகர் பட்டாளம் உள்ளது. பெங்களூரு அணி ஒரு கோப்பையை கூட இதுவரை வெல்லவில்லை எனக் கூறினார்.
கடந்த 2016 ஐபிஎல் சீசனில் விராட் கோலி நான்கு சதங்கள் மற்றும் 7 அரைசதங்களுடன் 81.08 சராசரியில் 973 ரன்கள் எடுத்தார். 2016 கோலிக்கும் ஆர்சிபிக்கும் மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு பெங்களூரு அணி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன். விராட் கோலியும் ஆர்சிபியும் பட்டத்தை வென்றால், அது ஆர்சிபி வரலாற்றில் மட்டுமல்ல, ஐபிஎல் வரலாற்றின் மிகப்பெரிய தருணமாக இருக்கும். 2009, 2011 மற்றும் 2016 பதிப்புகளின் இறுதிப் போட்டிக்கு வந்த பெங்களூரு அணி இன்னும் இன்னும் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இந்த ஆண்டு கட்டாயம் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என நினைக்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.
பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி தனது கேப்டன்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக டூ பிளிசிஸிடம் கொடுத்துவிட்டு அணியில் ஒரு வீரராக முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றார். விராட் கோலியின் உடல் நிலையைக் கணக்கில் கொண்டால் அவர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். அதற்குள் விராட் கோலி எத்தனை கோப்பைகளை வெல்லப்போகின்றார் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.