Points Table IPL 2023: கொல்கத்தா த்ரில் வெற்றி.. மும்பை - பெங்களூரு ஜாக்பாட் யாருக்கு?..புள்ளிப்பட்டியல் இதோ..!
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பெற்ற, த்ரில் வெற்றியை தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் நேர்ந்துள்ள மாற்றங்கள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பெற்ற, த்ரில் வெற்றியை தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் நேர்ந்துள்ள மாற்றங்கள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் சீசன்:
16வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களிலும், தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 53 லீக் போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக அணிகள் முட்டி மோதி வருகின்றன. அதிலும் முதல் இரண்டு இடங்களை குஜராத் மற்றும் சென்னை அணிகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், கடைசி இரண்டு இடங்களுக்கு தான் மீதமுள்ள 8 அணிகளும் கடுமையாக போராடி வருகின்றன.
நேற்றைய போட்டி:
ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, தவான் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியில் கேப்டன் ராணா, ஆண்ட்ரே ரஸல் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனால் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது நடப்பு தொடரில் அந்த அணி பெறும் ஐந்தாவது வெற்றி ஆகும். இதனால், புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணி ஒரே அடியாக 5வது இடத்திற்கு முன்னேற, மற்ற அணிகள் எந்தெந்த இடங்களுக்கு மாற்றம் கண்டுள்ளன உள்ளன என்பதை தற்போது அறியலாம்.
புள்ளிப்பட்டியல்:
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் |
குஜராத் | 11 | 8 | 3 | 16 |
சென்னை | 11 | 6 | 4 | 13 |
லக்னோ | 11 | 5 | 5 | 11 |
ராஜஸ்தான் | 11 | 5 | 6 | 10 |
கொல்கத்தா | 11 | 5 | 6 | 10 |
பெங்களூரு | 10 | 5 | 5 | 10 |
பஞ்சாப் | 11 | 5 | 6 | 10 |
மும்பை | 10 | 5 | 5 | 10 |
ஐதராபாத் | 10 | 4 | 6 | 8 |
டெல்லி | 10 | 4 | 6 | 8 |
முதல் நான்கு இடங்களில் யார்?
குஜராத் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் எட்டில் வென்று 16 புள்ளிகளுடன் தொடர்ந்து வலுவாக முதலிடத்தில் நீடிக்கிறது. அதேபோன்று சென்னை அணியும் 11 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எதும் எட்டப்படவில்லை. இதனால் 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்து தோல்வி கண்டு வரும் லக்னோ அணியும் 11 புள்ளிகளுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் அங்கம் வகிக்கிறது. ராஜஸ்தான் அணியோ 11 போட்டிகளில் விளையாடி வெறும் 5 வெற்றிகளை மட்டுமே பெற்று, ரன் ரேட் அடிப்படையில் தற்போது வரை 4வது இடத்தில் நீடிக்கிறது.
மற்ற அணிகளின் நிலை:
கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் தலா 11 போட்டிகளிலும், பெங்களூரு மற்றும் மும்பை தலா 10 போட்டிகளிலும் விளையாடி, தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை ஆகிய அணிகள், புள்ளிப்பட்டியலில் முறையே 5 முதல் 8வது இடங்களில் நீடிக்கின்றன. ஐதராபாத் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் தலா 10 போட்டிகளில் விளையாடி அதில் நான்கில் வெற்றி கண்டு 8 புள்ளிகளுடன் கடைசி இரண்டு இடங்களில் நீடிக்கின்றன.
இன்றைய போட்டி:
பிளே ஆஃப் சுற்று நெருங்கி வரும் சூழலில், ஐபிஎல் தொடரில் இன்று மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில், வெற்றி பெறும் அணி நேரடியாக புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை பெங்களூரு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.