Mumbai Indians: பும்ரா வெற்றிடத்தை நிரப்புவார்களா ஆர்ச்சர், கிரீன்? மீண்டு வருமா மும்பை இந்தியன்ஸ்?
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் பலவீனம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் 31ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டித் தொடரில் அனைத்து அணிகளும் கோப்பை வெல்லும் முனைப்புடன் களம் இறங்கவுள்ளன.
பலமிகுந்த மும்பை இந்தியன்ஸ்:
மொத்தம் 10 அணிகள் களமிறங்கினாலும், மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் அசுர பலம் வாய்ந்த அணியாக இருந்து உள்ளது. இதனாலேயே ஐபிஎல் வரலாற்றில் வேறு எந்த அணியும் இதுவரை வென்றிடாத அளவிற்கு 5 முறை ( 2013, 2015, 2017, 2019, 2020) கோப்பையை வென்றுள்ளது.
எப்போதும் மிகவும் பலமான அனியாக இருந்து மற்ற அணிகளுக்கு தலைவலி கொடுத்த மும்பை அணிக்கு, கடந்த சீசன் தலைவலியாக இருந்தது. மும்பை அணியின் ஆஸ்தான பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியதால் அந்த அணிக்கு பந்து வீச்சு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பும்ரா வீசும் 4 ஓவர்கள் போட்டியின் தன்மை முற்றிலும் மும்பைக்கு சாதகமாக்கிவிடும் என்பதால் மும்பை அணியால் அவரது இடத்தினை நிரப்ப முடியவில்லை என்பதை சீசன் முழுவதற்கும் காண முடிந்தது. இதனால், மும்பை அணி 14 போட்டிகளில் 10 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து, 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியால் ப்ளே ஆஃப்க்கு கூட முன்னேறவில்லை. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது.
ஆர்ச்சர், கிரீன்:
இம்முறை பும்ரா இல்லை என்றாலும், மின்னல் வேக பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், அதிரடிக்கு பெயர் போன கேமரூன் கிரீன் ஆகியோர் அணியில் இணையவுள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதேபோல், மும்பை அணியில் தங்கவைக்கப்பட்ட 4 வீரர்களில் ஒருவரான சூர்யகுமார் யாதவ், சமீபத்தில் நடந்த இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து மூன்று முறை கோல்டன் டக்-அவுட் ஆனார். இது மும்பை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
முதல் போட்டி
மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை தனது முதல் போட்டியில் விராட் கோலி உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது. இதுவரை நடந்த சீசன்களில் எல்லாம் மும்பை அணி எதிர் கொள்ளும் முதல் போட்டியில் வென்றதாக வரலாறு இல்லை. அப்படி இருக்கும் போது, பெங்களூரு அணியுடனான போட்டியில் வென்று தன் மீது உள்ள மோசமான வரலாறுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என தெரிந்து கொள்ள ஏப்ரல் மாதம் 2ஆம் தேதிவரை காத்திருக்க வேண்டும் . இந்த போட்டி, கர்நாடகாவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மும்பை அணி களமிறங்கும் போட்டி விபரங்கள்
- ஏப்ரல் 2, 2023 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் v மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு
- ஏப்ரல் 8, 2023 - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை
- ஏப்ரல் 11, 2023 - டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், டெல்லி
- ஏப்ரல் 16, 2023 - மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை
- ஏப்ரல் 18, 2023 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் v மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத்
- ஏப்ரல் 22, 2023 - மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், மும்பை
- ஏப்ரல் 25, 2023 - குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், அகமதாபாத்
- ஏப்ரல் 30, 2023 - மும்பை இந்தியன்ஸ் v ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை
- மே 3, 2023 - பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், மொஹாலி
- மே 6, 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், சென்னை
- மே 9, 2023 - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை
- மே 12, 2023 - மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், மும்பை
- மே 16, 2023 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிராக மும்பை இந்தியன்ஸ், லக்னோ
- மே 21, 2023 - மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை