"Pant-ஐ கொஞ்ச அதிகமா காசு கொடுத்து வாங்கிட்டோம்" லக்னோ அணி ஓனர் ஓபன் டாக்!
ரிஷப் பண்ட்-ஐ வாங்க சற்று அதிகமாக செலவழித்துள்ளதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.
ரிஷப் பண்ட்-ஐ வாங்குவதற்காக 26 கோடி ரூபாயை ஒதுக்கி வைத்திருந்ததாகவும் ஆனால், அவரை வாங்க ஒரு கோடி ரூபாய் கூடுதலாக செலவழித்துள்ளதாகவும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார். அவரை வாங்க சற்று அதிகமாக செலவழித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2025ம் ஆண்டு சீசனில் ஒவ்வொரு அணி சார்பிலும் களமிறங்க உள்ள வீரர்களுக்கான, மெகா ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இந்த ஏலம் இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது.
வரலாறு படைத்த ரிஷப் பண்ட்:
இன்றைய ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தனர். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி ரூபாய்க்கு எடுத்தது.
அதேபோல, ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பண்ட். கடும் போட்டிக்கு மத்தியில் லக்னோ அணி அவரை, 27 கோடி ரூபாய்க்கு எடுத்தது. இதுகுறித்து அந்த அணியின் ஓனர் சஞ்சீவ் கோயங்கா கூறுகையில், "ரிஷப் பண்ட்-ஐ வாங்குவதற்காக 26 கோடி ரூபாயை ஒதுக்கி வைத்திருந்தோம்.
லக்னோ அணி ஓனர் சொன்னது என்ன?
ஆனால், அவரை வாங்க ஒரு கோடி ரூபாய் கூடுதலாக செலவழித்துள்ளோம். அவரை வாங்க சற்று அதிகமாக செலவழித்துள்ளோம். இருப்பினும், பண்டை வாங்கியதில் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்" என்றார்.
மற்ற அணிகளை பொறுத்தவரையில்,டேவன் கான்வாயை தங்களுடைய முதல் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. அவரை 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கிய சிஎஸ்கே, அடுத்ததாக ராகுல் திரிபாதியை 3.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
சாமர்த்தியமாக செயல்பட்ட சென்னை அணி, ரச்சின் ரவீந்திராவை 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இறுதியாக, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
முகமது ஷமியை 10 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணியும் மிட்செல் ஸ்டார்கை 11 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணியும் வாங்கியது. ஜாஸ் பட்லரை 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத் அணி.
வீரர்களின் அடிப்படை விலை ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.2 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து அதிகபட்சமாக 207 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.