KKR vs RR IPL 2023: கொல்கத்தாவுக்கு காப்பு கட்டுமா ராஜஸ்தான்.. டாஸ் வென்று பந்து வீச முடிவு..!
KKR vs RR IPL 2023: இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தங்களது அணி முதலில் ஃபீல்டிங் செய்யும் என அறிவித்துள்ளார்.
இந்த ஐபிஎல் சீசன் இப்போது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், முதல் 4 இடங்களுக்குள் இடம் பிடிக்கும் வகையில், ஒவ்வொரு போட்டியும் அனைத்து அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. களமிறங்கிய 10 அணிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ப்ளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. மீதமுள்ள 9 அணிகளில் யார் ப்ளேஆஃப்க்கு தகுதி பெறுவார்கள் என்பது இதுவரை கேள்விக்குறியாக உள்ளது. இந்த சீசனின் 56வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தற்போது தலா 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி நேரடியாக புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடிக்கும் என்பதால் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தங்களது அணி முதலில் ஃபீல்டிங் செய்யும் என அறிவித்துள்ளார்.
இந்த சீசனின் இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 6வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று வலுவான அணியாக களமிறங்குகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிப்பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்த 6 போட்டிகளில் 5ல் தோல்வியை சந்தித்துள்ளது.
நேருக்குநேர்:
ஐபிஎல் போட்டியில் இதுவரை கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் 26 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா 14 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 12 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.இரு அணிகள் மோதும் இந்த முக்கியமான போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு இதுவரை நடந்த 83 ஐபிஎல் போட்டிகளில், இலக்கை விரட்டிய அணி 49 முறை வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 34 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சதம் விளாசிய இளம் வீரர்கள்
இரு அணிகளைப் பொறுத்தவரையில் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். குறிப்பாக இந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக சதம் விளாசிய வெங்கடேஷ் ஐயர், ராஜஸ்தான் அணிக்காக சதம் விளாசிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டு இளம் இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ள அணி என்பதால் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என மைதானம் முழுவதும் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.