MI Squad Jordan: பிளே ஆஃப் நேரம்.. சொதப்பிய ஆர்ச்சரை ஊருக்கு அனுப்பிய மும்பை.. புதிய வீரரை களமிறக்கி அதிரடி
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்துள்ளது. அதன்படி, அவரது சகநாட்டு வீரரான க்றிஸ் ஜோர்டன் மாற்று வீரராக மும்பை அணியில் இணைந்துள்ளார்.
மும்பை அணியில் ஜோர்டன்:
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”க்றிஸ் ஜோர்டன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைகிறார். ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக நடப்பு தொடரில் மீதமுள்ள போட்டிகளுக்காக ஜோர்டன் அணியில் இணைகிறார். ஆர்ச்சர் காயத்தில் இருந்து மீள்வது மற்றும் அவரது உடல்தகுதி குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து கவனித்து வருகிறது. காயத்திலிருந்து முழுமையாக மீள்வதற்காக அவர் தாயகம் திரும்புவதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான ஃபார்மில் ஆர்ச்சர்:
கடந்த 2022ம் ஆண்டு ஏலத்தில் 8 கோடி ரூபாய் கொடுத்து ஆர்ச்சரை மும்பை அணி ஒப்பந்தம் செய்தது. ஆனாலும், காயம் காரணமாக கடந்த தொடரில் அவர் விளையாடவில்லை. காயத்திலிருந்து மீண்டு நடப்பு தொடரில் தான் முதன்முறையாக மும்பை அணிக்காக விளையாடினார். இருந்தாலும், முன்பு இருந்த அளவிளான துல்லியமான யார்க்கர்களையோ, பவுன்சர்களையோ அவரால் வீச முடியவில்லை. அதோடு ரன்களையும் வாரிக்கொடுத்தார். 5 போட்டிகளில் விளையாடி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்ததார். இந்த சூழலில் தான் அவருக்கு மாற்று வீரராக ஜோர்டன் மும்பை அணியில் இணந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஜோர்டன்:
இங்கிலாந்தை சேர்ந்த 34 வயதான ஜோர்டன் ஏற்கனவே ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். இறுதியாக கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடினார். இதுவரை 27 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேநேரம், இவரது எகானமி ரேட் 9.32 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் அணி:
நடப்பு தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி மற்றும் 5 தோல்விகளை பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் நீடிக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், மீதமுள்ள4 போட்டிகளில் குறைந்தது 3 போட்டிகளிலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 200 ரன்கள் என்ற இலக்கையே எட்டி பிடிக்கும் அளவிற்கு பேட்டிங்கில் வலுவாக இருந்தாலும், பந்துவீச்சில் மும்பை அணி பின் தங்கியே உள்ளது. இந்த சூழலில் அனுபவம் வாய்ந்த வீரரான ஜோர்டன் மும்பை அணியில் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு - மும்பை மோதல்:
இந்த சூழலில் தான் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டூப்ளெசிஸ் தலைமையிலான பெங்களூரு மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது. அதேநேரம், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்பதால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.