SRH Vivrant Sharma: சன்ரைசர்ஸிற்காக களமிறங்கிய ஜம்மு காஷ்மீர் நாயகன்...! யார் இந்த விவ்ராந்த் சர்மா?
JK Cricketer Vivrant Sharma: ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான விவ்ராந்த் ஷர்மா, ராஜஸ்தானுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமானார்.
JK Cricketer Vivrant Sharma: ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான விவ்ராந்த் ஷர்மா, ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். பர்வேஸ் ரசூல், ரசிக் சலாம், அப்துல் சமத், உம்ரான் மாலிக் மற்றும் யுத்வீர் சிங் ஆகியோரின் வரிசையில் இணைந்த ஜம்மு காஷ்மீரில் இருந்து ஐபிஎல்லில் விளையாடிய ஆறாவது வீரர் என்ற பெருமையை விவ்ராந்த் பெற்றார்.
யார் இந்த விவ்ராந்த் சர்மா?
ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை தனது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்தை தாண்டி ஏலத்தில் ரூ.2.60 கோடிக்கு ஆல்ரவுண்டரை எடுத்தது. விவ்ராந்த் ஜம்மு - காஷ்மீர் அணிக்காக ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடி 191 ரன்களை சராசரியாக 23.87 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 128.18 என எடுத்திருந்தார். 5.73 என்ற எக்கானமியில் ஆறு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் விவ்ராந்த் 14 போட்டிகளில் 39.92 சராசரியுடன் உள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 154* என குவித்துள்ளார். இந்த வடிவத்தில் அவர் எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். விவ்ராந்த் ஜம்மு - காஷ்மீர் அணிக்காகவும் ஏழு முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரது ஐபிஎல் அறிமுகமானது அவரது வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும்.நேற்றைய போட்டியில் அவர் 2 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் கைப்பற்றாமல் 18 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இந்த போட்டியில் அவர் பேட்டிங் செய்யவில்லை. ஆனால் சன்ரைசர்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 215 ரன்கள் என்ற, இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் அபிஷேக் சர்மா அதிரடியாக ரன் குவித்தனர். குறிப்பாக அடுத்தடுத்த பவுண்டரிகலை விளாசிய அன்மோல்ப்ரீத் சிங், 35 ரன்கள் சேர்த்து இருந்தபோது சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா - அன்மோல்ப்ரீத் சிங் கூட்டணி முதல் விக்கெட்டிற்கு 51 ரன்களை சேர்த்தது.
அபிஷேக் சர்மா:
அதேநேரம் மறுமுனையில் சக தொடக்க வீரரான அபிஷேக் சர்மா தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 34 பந்துகளில் 55 ரன்களை விளாசி, ரவிச்சந்திரன் அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து சரிந்த விக்கெட்:
மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த திர்பாதி மற்றும் கிளாசென் கூட்டணி அதிரடியாக விளையாடி ரன்சேர்த்தது. குறிப்பாக கிளாசென் அடுத்தடுத்து பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினார். 26 ரன்களை சேர்த்து இருந்தபோது சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் திரிபாதி தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் 47 ரன்களை சேர்த்து இருந்தபோது சாஹல் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து கேப்டன் மார்க்ரமும் 6 ரன்களுக்கு நடையை கட்டினார். இறுதியில் 19வது ஓவரில் அதிரடியாக விளையாடிய பிலிப்ஸ் ஹாட்ரிக் சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்து அசத்தினார். ஆனால், அவர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
ஐதராபாத் த்ரில் வெற்றி
கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது, சந்தீப் சர்மா பந்துவீச்சில் சமத் கேட்ச் அவுட்டானார். அது நோபால் ஆனதால் மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தில், ஐதராபாத் வெற்றி பெற 4 ரன்கள் தேவைப்பட்டது. இதையடுத்து வீசப்பட்ட ப்ரீ-ஹிட் பந்தில் சமாத் பவுண்டரி அடித்து ஐதராபாத்திற்கு திரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.