IPL Cheerleaders: ரசிகர்களை கவரும் சியர்லீடர்ஸின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? ஒவ்வொரு அணியும் எவ்வளவு தர்றாங்க..?
எல்லோரையும் உற்சாகப்படுத்தும் அவர்கள் ஆட்டம் முழுவதும் ஆடிக் களைத்துப் போவார்கள். சிரித்துக்கொண்டே செய்யும் இந்த கடினமான வேலைக்கு அவர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் போட்டிகள் தொடங்கி பரபரவென நடந்து கொண்டிருக்கின்றன. மைதானங்கள் ரசிகர்களால் நிரம்பி வழிகிறது. வீரர்களை உற்சாகப்படுத்த ரசிகர்கள் இருக்க, அந்த ரசிகர்களையே உற்சாகப்படுத்தும் நடனம் ஆடும் 'சியர் லீடர்ஸ்' தான் ஐ.பி.எல். பாரம்பரியமாக மாறிவிட்டது.
முதலில் சியர் கேர்ள்ஸ் ஆக இருந்த இந்த கலாச்சாரத்தின் மீது ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் வந்த போது, அதில் ஆண்களையும் சேர்த்து 'சியர் லீடர்ஸ்' ஆக்கியது நிர்வாகம். ஒவ்வொரு அணிக்கும், தனித்தனி நிறத்தில் உடை அணிந்து ஆடுபவர்கள் உள்ளனர். ஒவ்வொரு பவுண்டரி, சிக்ஸர், விக்கெட்டுகளுக்கும் மேடையில் ஏறி நடனம் ஆடும் அவர்களும், ரசிகர்களின் சத்தமும், முக பாவனைகளும் ஐ.பி.எல்.இன் அடையாளம். சுவாரஸ்யங்கள் நிகழும் ஒவ்வொரு முறையும் கேமரா அவர்கள் பக்கம் திரும்பாமல் இருக்கவே முடியாது. எல்லோரையும் உற்சாகப்படுத்தும் அவர்கள் ஆட்டம் முழுவதும் ஆடிக் களைத்துப் போவார்கள். சிரித்துக்கொண்டே செய்யும் இந்த கடினமான வேலைக்கு அவர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஐபிஎல் சியர்லீடராக இருப்பதற்கு என்ன தகுதி?
நடனம், மாடலிங் மற்றும் ஒரு பெரிய பார்வையாளர்கள் கூட்டத்தின் முன் நிகழ்ச்சிகளை நடத்திய அனுபவம் வேண்டும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அதன் தேவைகள் அதோடு முடிவதில்லை. அழகான முகமும், நடனம் குறித்த அறிவும் நிறைய இருக்க வேண்டும். குழு உறுப்பினராகச் செயல்படும் திறன், ஒற்றுமையுடன் நடந்துகொள்ளும் திறன் இருக்க வேண்டும். ஐபிஎல் சியர்லீடராக இருப்பதற்கான தேர்வு முறையும் எளிமையானது அல்ல. பல சுற்று நேர்காணல்கள் உடன், எழுத்துத் தேர்வும் உள்ளது என்பதைக் கேட்டால் ஆச்சரியமாக உள்ளதல்லவா? விண்ணப்பதாரர் வேலைக்குத் தகுதியானவரா? என்பதை ஆராய்வதற்கே எழுத்துத் தேர்வு. ஐ.பி.எல். சியர்லீடராக செயல்முறை தேர்வின் போது, தொழில்முறை நடனமாடுபவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
எப்படி தேர்வு செய்வார்கள்?
இந்த வேலைக்கு ஏராளமான விண்ணப்பதாரர்கள் வருகிறார்கள், அதனால் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எல்லோரிடமும் இருந்து தனித்து நிற்க வேண்டும். நீங்கள் சிறந்தவர் என்பதை நடுவர்களிடம் நிரூபிக்க வேண்டும். இந்த வேலை எளிதானதாக தோன்றலாம், ஆனால் அப்படி இல்லை. துறையில் மிகுந்த ஆர்வமும் அனுபவமும் உள்ளவர்களே வேலைக்கு மிகவும் பொருத்தமானவர்கள். மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பெரும்பாலான சியர்லீடர்கள் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதனால் இந்தியர்களுக்கு வரவேற்பு இல்லை என்று அர்த்தமல்ல. எல்லோரும் முயற்சிக்கலாம்.
என்ன சம்பளம்?
கோவிட் விதிகள் காரணமாக, சியர்லீடர்கள் கடந்த ஆண்டு ஐ.பி.எல்.ல் இடம்பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு அவர்கள் களமிறங்கியுள்ளனர். ஊடக அறிக்கைகள் மற்றும் ஆதாரங்களின்படி ஐபிஎல் சியர்லீடர்கள் ஒரு போட்டிக்கு சுமார் ரூ. 14,000 முதல் ரூ. 17,000 வரை சம்பளம் வாங்குகிறார்கள். இந்த சம்பளம் அவர்களுக்கு அணி நிர்வாகத்திடம் இருந்து செல்கிறது. சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் போன்ற அணிகள் தங்கள் சியர் லீடர்களுக்கு ஒவ்வொரு ஆட்டத்திலும் ரூ.12,000-க்கு மேல் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போன்ற அணிகள் ஒவ்வொரு சியர்லீடர்களுக்கும் ரூ. 20,000 கொடுப்பதாக தெரிகிறது. இதில் இருப்பதிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சியர் லீடர்கள் தான் அதிக தொகையை சம்பாதிக்கின்றனர். அவர்கள் ஒரு போட்டிக்கு சுமார் ரூ. 24,000 வரை சம்பாதிக்கிறார்கள். இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர்களின் வழக்கமான ஊதியத்தைத் தவிர, அவர்களின் அணிகள் வெற்றியைப் பெறும்போது பல மடங்கு உயர்வும் கிடைக்கும். இது போக ஆடம்பரமான தங்குமிடங்கள் மற்றும் தேவையான விஷயங்கள், தினசரி உணவு போன்ற பிற சலுகைகளையும் பெறுகிறார்கள்.