(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2024: இந்தியாவில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள்.. இறுதிப்போட்டி எப்போது..? தகவலை சொன்ன ஐபிஎல் தலைவர்!
ஐபிஎல் 17வது சீசன் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் இந்தியாவிலேயே நடைபெறும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார். முன்னதாக, மக்களவை தேர்தல் காரணமாக, ஐபிஎல் 17வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. ஆனால், தற்போது இந்த செய்தி பொய் மற்றும் யூகங்கள்தான் என்றும் இது உண்மையல்ல என்பதுபோல் செய்தி ஒன்று வந்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசனி இறுதிப் போட்டி மே 26ம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், ஜூன் 1ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக, இந்திய அணி வீரர்களுக்கு குறைந்தது 8 முதல் 10 நாட்கள் ஓய்வு அல்லது அவகாசம் வழங்க பிசிசிஐ விரும்புகிறது.
IPL 2024 final could tentatively happen on May 26. [PTI] pic.twitter.com/SuFZVnEdkC
— Johns. (@CricCrazyJohns) February 14, 2024
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஐபிஎல் தலைவர் அருண் துமால், “ ஐபிஎல் 17வது சீசன் இந்தியாவில் மட்டுமே நடைபெறும். இதற்கான தேதியை பிசிசிஐ விரைவில் அறிவிக்க உள்ளது. மக்களவை தேர்தல் தேதிக்காக காத்திருக்கிறோம். மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், ஐபிஎல் 17வது சீசன் அட்டவணையை வெளியிடுவோம்” என்று தெரிவித்தார்.
போட்டிகள் வெளிநாடுகளுக்கு மாற்றப்படாது:
செய்தி நிறுவனமான பிடிஐயின் அறிக்கையின்படி, ஐபிஎல் 17வது சீசனின் இறுதிப் போட்டி மே 26 ம் தேதி நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியை அயர்லாந்து அணிக்கு எதிராக ஜூன் 5-ஆம் தேதி தொடங்க உள்ளதால், பிசிசிஐ வீரர்களுக்கு 8 முதல் 10 நாட்கள் அவகாசம் அளிக்கலாம். இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வரவில்லை என்று தெரிவித்திருந்தது.
முன்னதாக, மக்களவை தேர்தல் காரணமாக, ஐபிஎல் 17வது சீசன் இந்தியாவுக்கு பதிலாக வெளிநாடுகளுக்கு மாற்றப்படும் என ஊகங்கள் எழுந்தன. ஐபிஎல் இரண்டாவது சீசன் 2009 மக்களவைத் தேர்தலின் போது தென்னாப்பிரிக்காவில் ஏற்பாடு நடத்தப்பட்டது. அதேபோல், 2014-ம் ஆண்டும் மக்களவைத் தேர்தல் இந்தியாவில் நடைபெற்றபோது ஐபிஎல் போட்டியின் முதல் பாதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டது. இருப்பினும், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. இதையடுத்து, இந்த முறையும் பிசிசிஐ ஐபிஎல் 17வது சீசனை இந்தியாவில் மக்களவை தேர்தலின் போது பாதுகாப்பாக நடத்த திட்டமிட்டு வருகிறது.