IPL SRH Vs RCB: இஷான் கிஷனின் அதிரடியுடன் 231 ரன்களை குவித்த ஹைதராபாத் - எட்டிப் பிடிக்குமா பெங்களூரு.?
லக்னோவில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில், முதலில் பேட்டிங்க செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை குவித்துள்ளது.

லக்னோவில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில், புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள பெங்களூரு அணியும், 8-வது இடத்தில் உள்ள ஹைதபாராத் அணியும் மோதுகின்றன. இதில், முதலில் பேட்டிங்க செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை குவித்துள்ளது.
இஷான் கிஷன் அதிரடி - 231 ரன்கள் குவித்த ஹைதராபாத்
லக்னோவில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில், காயம் காரணமாக இம்பாக்ட் பிளேயராக களமிறங்குகிறார் பெங்களூரு அணியின் முழு நேர கேப்டன் பட்டிதார். இதையடுத்து, இந்த போட்டியின் கேப்டனாக ஜிதேஷ் சர்மா செயல்படுகிறார். இப்போட்டியில் டாஸ் வென்ற அவர், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அதிரடி துவக்கத்தை கொடுத்தார் அபிஷேக் ஷர்மா. எனினும் 4-வது ஓவரில், 17 பந்துகளில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 34 ரன்களை எடுத்திருந்த நிலையில், கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷன் களமிறங்கினார். இந்நிலையில், மறுமுனையில் ஆடிவந்த டிராவிஸ் ஹெட்டும் 10 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து கிளாசன் களமிறங்க, இஷான், கிளாசன் ஜோடி வேகமாக ரன்களை குவித்தது. இஷான் கிஷன் 28 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் 13 பந்துகளில் 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கிளாசன் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த அனிகெட் வெர்மா, தடாலடியாக 9 பந்துகளில் 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரியுடன் 26 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி, 4 ரன்களில் ஆட்டமிழந்த வெளியேறினார். அதைத் தொடர்ந்து அபினவ் மனோகர் களத்திற்கு வந்து, 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய பேட் கம்மின்ஸ் 6 பந்துகளில் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 48 பந்துகளில் 5 சிக்சர்கள் 7 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை குவித்தது ஹைதராபாத்.
பெங்களூரு தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த போட்டியில் வென்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு பெங்களூரு சென்றுவிடும். 232 ரன்களை எட்டி முதலிடத்தை பிடிக்குமா பெங்களூரு. பார்ப்போம்...




















