RCB Vs PBKS: சிஎஸ்கே நிலை தான் மும்பைக்கும் - உள்ளூரில் சிக்கி தவிக்கும் ஆர்சிபி, மாஸ் காட்டுமா பஞ்சாப்?
IPL 2025 RCB Vs PBKS: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

IPL 2025 RCB Vs PBKS: பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டி, சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
மும்பைக்கு 3வது வெற்றி:
ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் அதிரடியாக ரன்குவித்தனர். இதனால், 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். நடப்பு தொடரில் அந்த அணி பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும். அதோடு கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் எந்த முன்னேற்றமும் இன்றி தொடர்ந்து 7வது இடத்திலேயே நீடிக்கிறது. முன்னதாக 5 தொடர் தோல்விகளுக்கு பிறகு, கடைசி போட்டியில் வெற்றி பெற்ற பின்னரும் சென்னை அணி 10வது இடத்திலேயே உள்ளது. இதனிடையே, ஐதராபாத் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஐந்தில் தோல்வி கண்டுள்ளது.
ஐபிஎல் புள்ளிப்பட்டியல்:
| அணிகள் | போட்டி | வெற்றி | தோல்வி | ரன்ரேட் | புள்ளிகள் |
| டெல்லி கேபிடல்ஸ் | 6 | 5 | 1 | 0.744 | 10 |
| குஜராத் டைட்டன்ஸ் | 6 | 4 | 2 | 1.081 | 8 |
| ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 6 | 4 | 2 | 0.672 | 8 |
| பஞ்சாப் கிங்ஸ் | 6 | 4 | 2 | 0.172 | 8 |
| லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 7 | 4 | 3 | 0.086 | 8 |
| கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 7 | 3 | 3 | 0.547 | 6 |
| மும்பை இந்தியன்ஸ் | 7 | 3 | 4 | 0.239 | 6 |
| ராஜஸ்தான் ராயல்ஸ் | 7 | 2 | 5 | -0.714 | 4 |
| சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 7 | 2 | 5 | -1.217 - | 4 |
| சென்னை சூப்பர் கிங்ஸ் | 7 | 2 | 5 | -1.276 - | 4 |
பெங்களூரு Vs பஞ்சாப்:
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. சின்னசுவாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இரு அணிகளும் இதுவரை தலா 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. புள்ளிப்பட்டியலில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் முறையே 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ளன. கடைசியாக விளையாடிய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.
தவிக்கும் பெங்களூரு - மாஸ் காட்டும் பஞ்சாப்:
நடப்பு தொடரில் வெளியூர் மைதானங்களில் அசத்தி வரும் பெங்களூரு அணி, சொந்த உள்ளூர் மைதானமான சின்னசுவாமியில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இதுவரை அங்கு விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியுற்று இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இன்றைய போட்டியிலாவது வென்று உள்ளூர் ரசிகர்களை ஆர்சிபி அணி குஷிப்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பஞ்சாப் அணி கடைசிய விளையாடிய லீக் போட்டியில், ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த இலக்கை நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைத்தது. அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் வெற்றிபெற தீவிரம் காட்டுகிறது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பஞ்சாப் 17 முறையும், பெங்களூரு 16 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிகபட்சமாக பெங்களூரு அணி 241 ரன்களையும், குறைந்தபட்சமாக 84 ரன்களையும் குவித்துள்ளது.




















