IPL 2025 RCB vs CSK: மாத்ரே, சுயாஷ், யஷ் தயாள் வெல்டன்! அசத்திய அன்கேப்ட் நாயகர்கள்!
IPL 2025 CSK vs RCB: ஆர்சிபி - சென்னை நேற்று மோதிய போட்டியில் யஷ் தயாள், ஆயுஷ் மாத்ரே, சுயாஷ் சர்மா அபாரமாக ஆடி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர்.

கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வரும் ஐபிஎல் தொடரில் ஏராளமான போட்டிகள் நடந்து வந்தாலும் சில போட்டிகள் எப்போதும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடும் வகையில் அமைந்து விடும். அந்த வகையில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியும் அமைந்துள்ளது.
பெங்களூர் அணி நிர்ணயித்த 214 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 40 ஓவர்கள் முழுமையாக வீசப்பட்ட இந்த போட்டியில் வெற்றி, தோல்வி என்ற முடிவிற்கு அப்பாற்பட்டு அற்புதமான கிரிக்கெட் போட்டியே இந்த போட்டி அமைந்தது.
ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதன் அடிப்படை நோக்கமே இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் அடையாளப்படுத்த வேண்டும் என்பதே ஆகும். இந்த நோக்கம் ஒவ்வொரு தொடரிலும் ஓரளவு வெளிப்பட்டாலும் சில தொடர்களில் வெளிநாட்டு வீரர்களின் ஆதிக்கம் அதிகளவு காணப்பட்டது. ஆனால், சமீபத்திய தொடர்களில் இந்திய வீரர்கள் நன்றாகவே ஆதிக்கம் செலுத்துகின்றனர். அந்த வகையில் இந்த தொடரில் இந்திய வீரர்கள் குறிப்பாக இந்திய அணியில் அறிமுகமே ஆகாத இளம் வீரர்கள் நன்றாகவே ஆதிக்கம் செலுத்துகின்றனர். அந்த வகையில் நேற்றைய போட்டியில் பாராட்ட வேண்டிய இந்திய இளம் வீரர்கள் பற்றி காணலாம்.
ஆயுஷ் மாத்ரே:
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக மாற்று வீரராக வாய்ப்பு கிடைத்து அணிக்குள் வந்துள்ள இந்த 17 வயது சிறுவன் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் நன்றாக பயன்படுத்தி வருகிறார். இந்த சீசனில் போராட்ட குணமே இல்லாமல் துவண்டு கிடந்த சென்னை அணியின் போராட்ட குணத்தை மீட்டெடுத்த இளஞ்சிங்கம் என்றே இவரை கூறலாம். இவர் நேற்றைய பாேட்டியில் 48 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 94 ரன்களை எடுத்தார். நிச்சயமாக இனி வரும் நாட்களில் இவரை இந்திய அணியில் காணலாம்.
சுயாஷ் சர்மா:
ஆர்சிபி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளபவர் சுயாஷ் சர்மா. சிறந்த சுழற்பந்துவீச்சாளராக இவர் எதிர்காலத்தில் வலம் வருவார் என்று நம்பலாம். நெருக்கடியான நேரத்தில் கட்டுக்கோப்பாக பந்துவீசி ஆட்டத்தை தனது அணிக்கு சாதகமாக மாற்றுகிறார். 21 வயதே ஆன சுயாஷ் சர்மா நிச்சயம் இந்திய அணிக்காகவும் இதேபோல நெருக்கடியான சூழலில் இந்தியாவிற்கு சாதகமாக பந்துவீசும் சூழல் எதிர்காலத்தில் அமையலாம். நேற்றைய போட்டியில் இவர் 18வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
யஷ் தயாள்:
நேற்றைய போட்டியின் உண்மையான நாயகன் யஷ் தயாள் என்றே கூறலாம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் குஜராத் அணிக்காக ஆடியபோது கொல்கத்தா வீரர் ரிங்குசிங் இவர் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டபோது, இவரது கிரிக்கெட் வாழ்வு முடிந்தது என்றே பலரும் நினைத்தனர். ஆனால், ஆர்சிபி அணிக்காக இவர் விளையாடத் தொடங்கிய பிறகு சிறந்த டெத் பவுலராக உருவெடுத்துள்ளார்.
கடந்த சீசனில் ப்ளே ஆஃப் செல்லப்போவது யார்? என்ற போட்டியில் பரபரப்பான கடைசி ஓவரில் தோனியை அவுட்டாக்கியும், கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது ஜடேஜாவை அடிக்கவிடாமல் செய்தும் ஆட்டத்தை மாற்றினார். நேற்றைய போட்டியிலும் 3 பந்துகளுக்கு 6 ரன்கள் அடிக்கவிடாமல் செய்ததுடன் தோனியையும் அவுட்டாக்கினார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த டெத் பவுலராக 27 வயதான யஷ் தயாள் உலா வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் ஆகும்.
மேலும், இந்த தொடரில் பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், நேகல் வதேரா, விக்னேஷ் புத்தூர், ஷைக் ரஷீத், சூர்யவன்ஷி என இளம் வீரர்கள் ஜொலித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




















