Rajat Paditar: "அன்று விலைபோகாதா.. இன்று விலைமதிப்பில்லா" ரஜத் படிதார் வாழ்வை மாற்றிய அந்த ஒரு போட்டி!
IPL 2025: ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் ஒரு காலத்தில் ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரராக இருந்து தற்போது பெங்களூர் அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கொல்கத்தாவில் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் பெங்களூர் அணி விளையாடுகிறது. இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத பெங்களூர் அணி இந்த முறை தங்களது புதிய கேப்டனாக ரஜத் படிதார் தலைமையில் களமிறங்குகிறது.
விலைபோகாத படிதார்:
ஆர்சிபி அணியின் கேப்டனாக இந்த முறை கோப்பை கனவுடன் களமிறங்கும் ரஜத் படிதார், பெங்களூர் அணிக்குள் நுழைந்தது எப்படி தெரியுமா? 2021ம் ஆண்டு இவரை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால், அந்த சீசனில் 4 போட்டிகளில் வெறும் 71 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவரை 2022ம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தின்போது ஆர்சிபி அணி விடுவித்தது. ஆனால், ஆர்சிபி அணிக்கு அவர் தலைமை தாங்க வேண்டும் என்று அப்போதே நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
மீண்டு வந்தது எப்படி?
2022ம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் ரஜத் படிதாரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. அப்போது, ஆர்சிபி அணிக்காக லவ்நித் சிசோடியா ஆர்சிபி அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். சீசனின் பாதியிலே இவருக்கு காயம் ஏற்பட்டதால் இவருக்கு பதிலாக மாற்று வீரராக ஆர்சிபி அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டார் ரஜத் படிதார்.
ஆனால், இந்த சீசனில் ஆர்சிபி-யின் புதிய நம்பிக்கை தான் என்று நிரூபிக்கும் விதமாக அவரது ஆட்டம் இருந்தது. அந்த சீசனில் கொல்கத்தா மைதானத்தில் நடந்த எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி லக்னோ அணியுடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணிக்கு கேப்டன் டுப்ளிசிஸ் டக் அவுட்டாக, அடுத்து வந்த ரஜத் படிதார் பட்டாசாய் வெடித்தார்.
அந்த ஒரு போட்டி:
விராட் கோலி 24 பந்துகளில் 25 ரன்களுடன் அவுட்டாக யாருடைய துணையும் இல்லாமல் ரன்மழையை பொழிந்தார் படிதார். அபாரமாக ஆடிய அவர் சதம் விளாசினார். 54 பந்துகளில் 12 பவுண்டரி 7 சிக்ஸருடன் 112 ரன்கள் ரஜத் படிதார் விளாச ஆர்சிபி அந்த போட்டியில் 207 ரன்களை எடுத்தது. அந்த போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபயர் 2-க்கும் முன்னேறியது. அந்த போட்டியில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
அதன்பின்பு, கடந்த இரு சீசன்களாக ஆர்சிபிக்காக தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். குறிப்பாக, கடந்த சீசனில் சிக்ஸர் மழை பொழிந்துள்ளார். ஐபிஎல் தொடரில் 27 போட்டிகளில் ஆடி 54 சிக்ஸர்களை ரஜத் படிதார் விளாசியுள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஆர்சிபி அணிக்கு கேப்டனாக களமிறங்கும் ரஜத் படிதார் அந்த அணிக்கு தனது முதல் கோப்பையை பெற்றுத் தருவாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ரஜத் படிதார் இதுவரை 27 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 1 சதம், 7 அரைசதத்துடன் 799 ரன்களை விளாசியுள்ளார்.