MI Vs SRH: சூப்பர் ஓவரில் சம்பவம், புள்ளிப்பட்டியலில் மாற்றம் - மும்பையில் இன்று ரன் மழை? ஐதராபாத் அடங்குமா?
IPL 2025 MI Vs SRH: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

IPL 2025 MI Vs SRH: ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ராஜஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்திய டெல்லி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி:
ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 188 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள் வலுவான அடித்தளத்தை அமைத்தனர். இதனால் அந்த அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி கட்டத்தில் டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். ஆட்டத்தின் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டபோது, ராஜஸ்தான் அணி வெறும் ஒரு மட்டுமே சேர்க்க போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.
தொடர்ந்து சூப்பர் ஓவரில் களமிறங்கிய ராஜஸ்தான், ஸ்டார்க் வீசிய ஓவரில் 11 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆனால் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியின் கே.எல். ராகுல் மற்றும் ஸ்டப்ஸ் கூட்டணி, சந்தீப் சர்மா பந்துவீச்சில் 4வது பந்திலேயே இலக்கை எட்டி அபார வெற்றியை உறுதி செய்தனர். இதனால், டெல்லி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியல்:
| அணி | போட்டிகள் | வெற்றி | தோல்வி | ரன்ரேட் | புள்ளிகள் |
| டெல்லி கேபிடல்ஸ் | 6 | 5 | 1 | 0.744 | 10 |
| குஜராத் டைட்டன்ஸ் | 6 | 4 | 2 | 1.081 | 8 |
| 3ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 6 | 4 | 2 | 0.672 | 8 |
| பஞ்சாப் கிங்ஸ் | 6 | 4 | 2 | 0.172 | 8 |
| லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 7 | 4 | 3 | 0.086 | 8 |
| கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 7 | 3 | 3 | 0.547 | 6 |
| மும்பை இந்தியன்ஸ் | 6 | 2 | 4 | 0.104 | 4 |
| ராஜஸ்தான் ராயல்ஸ் | 7 | 2 | 5 | -0.714 | 4 |
| சன்ரைசர்ஸ் ஐதராபாத் | 6 | 2 | 4 | -1.245 | 4 |
| சென்னை சூப்பர் கிங்ஸ் | 7 | 2 | 5 | -1.276 | 4 |
மும்பையில் ரன் மழையா?
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் இதுவரை தலா 6 போட்டிகளில் விளையாடி, தலா 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே 7 மற்றும் 9வது இடத்தில் உள்ளன. கடைசியாக விளையாடிய போட்டியில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. அதே உற்சாகத்தில் இன்றைய போட்டியிலும் வெல்ல முனைப்பு காட்டுகிறது. இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றால் மும்பை அணி, புள்ளிப்பட்டியலில் 6வது இடம் வரை முன்னேற்றக்கூடும். பந்துவீச்சு,பேட்டிங் என அனைத்து பிரிவிலும் வலுவான வீரர்கள் இருந்தாலும், களத்தில் முழு திறனை வெளிப்படுத்தாமல் இருப்பதே அணியின் பின்னடைவாக உள்ளது.
ஐதரபாத் அடங்குமா?
தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த ஐதராபாத் அணி, தனது கடைசி லீக் போட்டியில் 246 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்து புத்துணர்ச்சி பெற்றுள்ளது. அதே ஆக்ரோஷத்தை இன்றைய போட்டியிலும் காட்ட ஐதராபாத் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.ஹெட், அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் ஃபார்முக்கு திரும்பியுள்ளனர். இதனால், இன்றைய போட்டியில் ரன்மழை பொழிய அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அவர்களை மும்பை பந்துவீச்சாளர்கள் சமாளிப்பார்களா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
நேருக்கு நேர்
இரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 13 போட்டிகளிலும், ஐதரபாத் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிகபட்சமாக ஐதராபாத் 277 ரன்களையும், குறைந்தபட்சமாக மும்பை 87 ரன்களையும் பதிவு செய்துள்ளது.




















