GT vs SRH: மிரட்டி எடுத்த குஜராத்... டாட்டா சொன்ன சன்ரைசர்ஸ்... நம்ப்ர் 1 இடத்துக்கு செல்லுமா ஆர்சிபி? பழிவாங்குமா சிஎஸ்கே?
GT vs SRH: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது.

IPL 2025 GT vs SRH: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கில்-பட்லர் அபாரம்:
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைப்பெற்ற இந்தப்போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது, வழக்கமாக பொறுமையாக ஆரம்பிக்கும் சாய் சுதர்சன் இந்த முறை அதிரடி காட்டினார். கில் மற்றும் சாய் சுதர்சன் முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது. இதன் பிறகு களமிறங்கிய பட்லர் தனது அதிரடி ஆட்டத்தை இந்த போட்டியிலும் தொடர்ந்தார். கில் 78 ரன்களுக்கு சர்ச்சையான முறையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். பட்லர் மற்றும் பின் வரிசை வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது.
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி குஜராத் அணியின் பவுலர்களின் பந்துவீச்சில் ரன்களை அடிக்க முடியாமல் திணறினர், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் 20 ரன்களுக்கும், இஷான் கிஷன் 13 ரன்களுக்கு வெளியேறினர், அபிஷேக் சர்மா ஒருமுனையில் போராட அவருக்கு மற்ற பேட்ஸ்மேன்கள் அவருக்கு பார்ட்னர்ஷிப் வழங்காமல் நடையை கட்டினர், இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 186/6 மட்டுமே எடுத்தது, இதனால் இப்போட்டியை குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.
டாப்-2ல் குஜராத்:
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் 2வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பை மேலும் பிரகாசப்படுத்தியுள்ளது. குஜராத் அணி மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று டாப் 2 இடத்தை தக்கவைத்துக்கொள்ள நிச்சயம் போராடும். மறுப்பக்கம் 10வது போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 7வது தோல்வியை பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் நீடிக்கிறது.
புள்ளிப்பட்டியல்:
| அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | ரன்ரேட் |
| மும்பை இந்தியன்ஸ் | 11 | 7 | 4 | 14 | 1.274 |
| குஜராத் டைட்டன்ஸ் | 10 | 7 | 3 | 14 | 0.521 |
| ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 10 | 6 | 3 | 14 | 0.867 |
| பஞ்சாப் கிங்ஸ் | 10 | 6 | 3 | 13 | 0.199 |
| டெல்லி கேபிடல்ஸ் | 10 | 6 | 4 | 12 | 0.362 |
| லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 10 | 5 | 5 | 10 | -0.325 |
| கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 10 | 4 | 5 | 9 | 0.271 |
| ராஜஸ்தான் ராயல்ஸ் | 11 | 3 | 8 | 6 | -0.780 |
| சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 10 | 3 | 6 | 6 | -1.192 |
| சென்னை சூப்பர் கிங்ஸ் | 10 | 2 | 8 | 4 | -1.211 |
பழிவாங்குமா சிஎஸ்கே?
இன்று நடைப்பெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன, ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறியுள்ள சென்னை அணி ஆறுதல் வெற்றிக்காகவும் சீசன் தொடக்கத்தில் ஆர்சிபி அணியிடம் ஏற்ப்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்கும், அதே போல உள்ளூர் மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு வெற்றி பெற்றுள்ள ஆர்சிபி அணி இந்தப்போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய முயலும்.





















