CSK Vs PBKS: தட்ஸ் இட்..! வெளியேறியது சிஎஸ்கே, பலிக்காத தோனி மேஜிக் - நாக்-அவுட், மும்பை முதலிடம் பிடிக்குமா?
IPL 2025 CSK Vs PBKS: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை சென்னை அணி இழந்தது.

IPL 2025 CSK Vs PBKS: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளில் சென்னை அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.
சென்னை படுதோல்வி:
ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போடிட்யில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னையில் சாம் கரணை தவிரை மற்ற வீரர்கள் சொதப்ப, 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது. பஞ்சாப் சார்பில் சாஹல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரரான ப்ரம்சிம்ரன் சிங் அரைசதம் விளாசி அசத்தினார். அதோடு, கேப்டன் ஸ்ரேயார் அய்யரும் 72 ரன்களை விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்று, 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
பலிக்காத தோனி மேஜிக்:
நடப்பு தொடரில் 8வது தோல்வியை பெற்ற சென்னை அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்துள்ளது. மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து பிளே-ஆஃப் வாய்ப்பை சென்னை அணி இழப்பது ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும். 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு சென்னை அணி 14 போட்டிகளில் 7 வெற்றிகளை மட்டும் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்து பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து சென்னை அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து தோல்விகளுக்குப் பிறகு தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பு ஏற்றும், சென்னை அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் 2025:
| அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | ரன்ரேட் |
| ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 10 | 7 | 3 | 14 | 0.521 |
| பஞ்சாப் கிங்ஸ் | 10 | 6 | 3 | 13 | 0.199 |
| மும்பை இந்தியன்ஸ் | 10 | 6 | 4 | 12 | 0.889 |
| குஜராத் டைட்டன்ஸ் | 9 | 6 | 3 | 12 | 0.748 |
| டெல்லி கேபிடல்ஸ் | 10 | 6 | 4 | 12 | 0.362 |
| லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 10 | 5 | 5 | 10 | -0.325 |
| கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 10 | 4 | 5 | 9 | 0.271 |
| ராஜஸ்தான் ராயல்ஸ் | 10 | 3 | 7 | 6 | -0.349 |
| சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 9 | 3 | 6 | 6 | -1.103 |
| சென்னை சூப்பர் கிங்ஸ் | 10 | 2 | 8 | 4 | -1.211 |
முதலிடத்தை பிடிக்குமா மும்பை?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா 10 போட்டிகளில் விளையாடி முறையாடி புள்ளிப்பட்டியலில் முறையே மூன்று மற்றும் 8வது இடத்தில் உள்ளன. இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறக்கூடும். கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானின் சூர்யவன்ஷி:
தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த ராஜஸ்தான் அணி,கடந்த போட்டியில் இளம் வீரர் சூர்யவன்ஷியின் அதிரடியான சதத்தால் குஜராத்தை வீழ்த்தியது. நடப்பு தொடரின் பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்க இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது ராஜஸ்தான் அணிக்கு கட்டாயம். அதன்படி இன்றைய போட்டியில் மும்பை அணியை ராஜஸ்தான் சமாளிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஜெய்ஷ்வால் மற்றும் சூர்யவன்ஷியை தவிர பெரும்பாலான வீரர்கள் ஃபார்மில் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 15 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் மும்பை அணி அதிகபட்சமாக 214 ரன்களையும், குறைந்தபட்சமாக ராஜஸ்தான் 90 ரன்களையும் சேர்த்துள்ளது.




















