CSK Chepauk: வீழ்ந்தது சேப்பாக்கம்..! ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல மொத்தமா மூனும் போச்சு - தோனியின் கோட்டை மீளுமா?
CSK Dhoni Chepauk: ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி பன்னெடுங்காலமாக காத்து வந்த சாதனைகள், ஒரே ஆண்டில் அடுத்தடுத்து முறியடிக்கப்பட்டுள்ளன.

CSK Dhoni Chepauk: ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை, முதல்முறையாக ஐதராபாத் அணி வீழ்த்தியுள்ளது.
வெளியேறிய சிஎஸ்கே:
ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று, மிகவும் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. பெரும்பாலான எடிஷன்களில் குறைந்தபட்சம் பிளே-ஆஃப் சுற்றுக்காவது அந்த அணி முன்னேறிவிடும். ஆனால், இந்த முறை இதுவரை 9 போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால், கிட்டத்தட்ட சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பினை இழந்துள்ளது. இந்த தோல்வியை கூட ஏற்றுக்கொள்ளும் சிஎஸ்கே ரசிகர்களால், வழக்கமாக அணியிடம் பெருகி ஓடும் போராட்ட குணம் என்பதே இந்த முறை இல்லாததை தான் சற்றும் ஜீரணிக்க முடியவில்லை. இதன் காரணமாக தான், சென்னை அணியின் கோட்டையான சேப்பாக்கத்தில் பன்னெடுங்காலமாக காத்து வந்த மூன்று முக்கிய வெற்றிப் பயணங்கள் ஒரே ஆண்டில் சிதைக்கப்பட்டுள்ளன.
🚨 THE CHEPAUK HAS FALLEN. 🚨
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 25, 2025
- RCB won their first match in Chennai after 17 years.
- Delhi Capitals won their first match in Chennai after 15 years.
- SRH won their first ever match in Chennai Vs CSK in history. pic.twitter.com/DP8FvXqa7q
வீழ்ந்தது சேப்பாக்கம்..
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் சொந்த உள்ளூர் மைதானத்தில் 7 போட்டிகளிலும், வெளியூர் மைதானங்களில் 7 போட்டிகளிலும் விளையாடும். அந்த வகையில், நடப்பு தொடரில் இதுவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. அதுவும் மிகவும் மோசமான தோல்விகளை பதிவு செய்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்துவது என்பதே கனவாக இருந்த சில சிறிய அணிகள் கூட, நடப்பு தொடரில் சேப்பாக்கத்தில் மிக எளிதாக எந்தவித சிரமமும் இன்றி சென்னை அணியை பந்தாடி சென்றுள்ளது. அதில் புதியதாக இணைந்து இருக்கும் அணி தான் ஐதராபாத். இதனை குறிப்பிட்டு” THE CHEPAUK HAS FALLEN” என்ற வாசகம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
”சிதைந்த சேப்பாக்கம் கோட்டை”
17 ஆண்டு போராட்டம்: ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டில் ஒருமுறை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவை வீழ்த்திய பிறகு, ஒருமுறை கூட பெங்களூருவால் மீண்டும் அங்கு வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை. 17 ஆண்டுகளில் சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கிய ஒவ்வொரு முறையும் ஆர்சிபிக்கு தோல்வியை பரிசாக்கியது சென்னை. ஆனால், நடப்பு தொடரில் மிக இளம் கேப்டனான ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி எளிதாக சிஎஸ்கேவை வீழ்த்தி, 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
15 ஆண்டு காத்திருப்பு: 2010ம் ஆண்டு சென்னை அணியை 112 ரன்களுக்கு சுருட்டி டெல்லி அணி சேப்பாக்கத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் பிறகு கடந்த 15 ஆண்டுகளில் ஒரு வெற்றியை கூட பெறமுடியாமல் சேப்பாக்கத்தில் இருந்து தோல்வியை மட்டுமே அந்த அணி பரிசாக பெற்றது. ஆனால், நடப்பு தொடரில் அக்சர் படேல் எனும் இளம் தலைமையிலான டெல்லி அணி, 25 ரன்கள் வித்தியாசத்த்ல் சிஎஸ்கேவை வீழ்த்தியது.
வாழ்நாள் தவம்: கடந்த 2013ம் ஆண்டு முதல் ஐதராபாத் அணி ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் ஐந்து போட்டிகளில் விளையாடி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், நடப்பாண்டில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, 13 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
தோனியின் கோட்டை மீளுமா?
சேப்பாக்கம் மைதானத்தை சென்னை அணியின் கோட்டையாக தோனி கட்டி எழுப்பினார். வெறும் 132 மற்றும் 142 என 152-க்கும் குறைவான இலக்குகளை கூட, 6 முறை வெற்றிகரமாக பாதுகாத்து எதிரணியை சிஎஸ்கே வீழ்த்தியுள்ளது. இதனால், சேப்பாக்கத்தில் சென்னையை வீழ்த்துவது எனநினைத்தாலே எதிரணிகளுக்கு திகில் ஏற்படும். சேப்பாக்கத்தில் சென்னையின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டும் என்றாலே எதிரணியின் பேட்டிங் ஆர்டர் நிலகுலையும். ஒட்டுமொத்தமாக இதுவரை 76 போட்டிகளில் விளையாடி 51 போட்டிகளில் வென்ற சென்னை அணி, வெறும் 24 போட்டிகளில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது. ஆனால், அந்த நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. தனது கோட்டையிலேயே சென்னை தடுமாறுகிறது, அதுவும் தோனியின் முன்பே இது அனைத்தும் நிகழ்வதே மேலும் கடினமானதாக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து சென்னை அணி மீண்டு வரவேண்டும் என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.




















