CSK Vs KKR: தோனி வந்தால் போதும்? பிளேயிங் லெவன் எங்கே? வரலாற்றில் மோசமான தோல்வி - ரசிகர்கள் கதறல்
IPL 2025 CSK Vs KKR: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத மோசமான தோல்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவு செய்துள்ளது.

IPL 2025 CSK Vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாட்டை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சிஎஸ்கே - தொடரும் சோகம்:
ஐபிஎல் வரலாற்றில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் அணி என்ற பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உள்ளது. ஆனால், முன்னெப்போதும் இல்லாத அளவில், நடப்பாண்டு தொடரில் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை, விட்டுக்கொடுக்காமல் இறுதி வரையாவது போராடுங்கள் என ரசிகர்களே கெஞ்சி கேட்கும் அளவிற்கு அணியில் செயல் திறன் உள்ளது. ஆனால், ரசிகர்களின் மனதை ஆற்றும் வகையில் கூட செயல்பட முடியாத அளவில் சென்னை அணி மோசமான நிலையை எட்டியுள்ளது.
வரலாற்றில் முதல்முறை..!
கொல்கத்தா அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் சென்னை அணி வெறும் 103 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த இலக்கை எதிரணி வெறும் 10.1 ஓவர்களிலேயே எட்டிவிட்டது. 16 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் வென்று, 5 முறை கோப்பையை வென்றுள்ள சென்னை அணி, தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியுறுவது, வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். ஹோம் கிரவுண்டான சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி பதிவு செய்த மிகக் குறைந்த ஸ்கோரும் இதுவாகும். எதிரணி அதிக பந்துகளை மீதம் வைத்ததன் அடிப்படையில் (59 பந்துகள் மிச்சம்), சென்னை அணி பெற்ற மிக மோசமான தோல்வி இதுவாகும்.
தோனி மட்டும் போதுமா?
சென்னை அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியுற்ற நிலையில் தான், காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் தொடரில் இருந்து வெளியேறினார். தோனி அந்த பொறுப்பிற்கு வந்ததும், சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்புமென ரசிகர்கள் நம்பினர். ஆனால், மிகவும் மோசமான தோல்வியை தான் சென்னை அணி மீண்டும் பெற்றுள்ளது. காரணம் அணியின் மோசமான செயல்பாட்டிற்கு கேப்டன்சி தான் காரணம் என எண்ணுவது தான். உண்மையில் சரியான வீரர்களின் கலவை மற்றும் போதுமான/சரியான மாற்று வீரர்கள் அணியில் இல்லாததும் அணியின் தோல்விக்கு காரணமாக உள்ளது.
பிளேயிங் லெவன் எங்கடா?
மற்ற 9 அணிகளும் வெற்றியோ, தோல்வியோ ஆட்டத்தின் போக்கையே தனிநபராக மாற்றக்கூடிய வீரர்கள் பலரை தங்கள் கைவசம் வைத்துள்ளனர். ஆனால், சென்னை அணியோ ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர் மற்றும் ஷிவம் துபே போன்ற வீரர்களை கொண்டு களம் காண்கிறது. உண்மையில் சொல்லப்போனால், வெற்றிக்கு உகந்த சரியான பிளேயிங் லெவனே சென்னை அணியிடம் இல்லை. அப்படி இருக்கையில் சென்னை அணி கேப்டனை மாற்றினால், வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.
2025 ஐபிஎல் சாமிக்கு? - 2026ல் அப்டேட் வருமா?
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மெகா ஏலத்தின் போதே, எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இளைஞர்களை சென்னை அணி தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், அங்கேயே கோட்டைவிட்டதன் விளைவே, சொந்த மைதானத்திலேயே அடுத்தடுத்து தோல்விகளை எதிர்கொண்டு வருகிறது. தற்போது அணி இருக்கும் நிலையை கருத்தில் கொண்டால், இந்த வருட ஐபிஎல் தொடர் சென்னை அணி சாமிக்கு விட்டதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு தொடருக்காவது உரிய மறுசீரமைப்புகளை மேற்கொண்டு, வலுவாக அணியை கட்டமைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.




















