(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2024 SRH vs CSK: டாஸ் வென்ற ஹைதராபாத்..பந்து வீச்சு தேர்வு! அதிரடி ஆட்டத்தை தொடங்குமா சி.எஸ்.கே?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் பிளேயிங் லெவனில் இணைந்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 18 வது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 5) தெலங்கானாவில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகின்றன.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில் கடைசியாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சிறப்பாக விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. அதேநேரம் முதல் இரு ஆட்டங்களிலும் பேட்டிங்கில் களமிறங்காத எம்.எஸ். தோனி 16 பந்துகளில் 37 ரன்கள் விளாசியது ரசிகர்களை சந்தோசப்படுத்தியது.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த சீசனில் கணிக்க முடியாததாக ஒரு அணியாகத்தான் விளையாடி வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 209 ரன்கள் இலக்கை துரத்தி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. ஆனால் அகமதாபாத்தில் குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்விஅடைந்தது.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
இந்நிலையில் தான் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்ய உள்ள சென்னை அணி அதிரடி ஆட்டத்தை தொடங்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனி காயம் காரணமாக விளையாடுவார என்ற சூழலில் அவர் அணியில் இடம்பெற்று இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன் ), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி(விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்):
அபிஷேக் சர்மா, எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர் ), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ்(கேட்ச்), ஜெய்தேவ் உனட்கட், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்