RR Vs LSG Match Highlights: கே.எல்.ராகுல், பூரன் போராட்டம் வீண்: லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
சஞ்சு சாம்சன் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ஐ.பி.எல் 2024:
ஐ.பி.எல் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் தான் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள்விளையாட்டு அரங்கத்தில் 4வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணி மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
வெற்றியுடன் தொடங்கிய ராஜஸ்தான் அணி:
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்தவகையில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கடைசி வரை களத்தில் நின்று 52 பந்துகளில் 3 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என மொத்தம் 82 ரன்களை குவித்தார். லக்னோ அணியை பொறுத்தவரை அந்த அணியின் பந்து வீச்சாளர் நவின் உல்-ஹக் 2 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி காக் 5 பந்துகள் களத்தில் நின்று 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து நடையைக்கட்டினார். மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்தார் அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல். ஆனால் அடுத்து வந்த தேவ்தட் படிக்கல் டக் அவுட் முறையிலும் மற்றும் ஆயுஷ் படோனி 1 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பின்னர் கேப்டன் கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா சிறப்பாக விளையாடினார். அந்த வகையில் 13 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரான் கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் முனைப்பில் விளையாடினார்கள்.அப்போது கே.எல்.ராகுல் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்படி அவர் 44 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என மொத்தம் 58 ரன்களை விளாசினார். பின்னர் மார்கஸ் ஸ்டோனிஸ் 3 ரன்களில் நடையைக் கட்டினார். நிக்கோலஸ் பூராம் சிறப்பாக விளையாடினாலும் அந்த அணியால் இலக்கை அடைய முடியவில்லை. லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவின் படி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ஐ.பி.எல் சீசன் 17லில் தாங்கள் விளையாடிய முதல் போட்டியிலேயே வெற்றியுடன் தொடங்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.