RCB vs DC Innings Highlights: ப்ளேஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா டெல்லி? 188 ரன்களை இலக்காக நிர்ணயித்த RCB!
IPL 2024 RCB vs DC Innings Highlights: டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இன்றைய போட்டியில் வெற்றியை எட்டினால் மட்டும்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் களமிறங்கியது.
17வது ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த ஆட்டம் பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் இன்று அதாவது மே மாதம் 12ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இன்றைய ஆட்டத்தின் டெல்லி அணியின் கேப்டன் அக்ஷர் பட்டேல் தனது அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார்.
இரண்டு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றியை எட்டினால் மட்டும்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் களமிறங்கியது. பெங்களூரு அணியின் இன்னிங்ஸை விராட் கோலியும் கேப்டன் டூ ப்ளெசிஸும் தொடங்கினர். இந்த சீசனில் சொதப்பலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் டூ ப்ளெசிஸ் தனது விக்கெட்டினை மூன்றாவது ஓவரில் வெளியேறினார். இவரது விக்கெட்டினை முகேஷ் குமார் கைப்பற்றினார்.
அடுத்து வந்த வில் ஜாக்ஸ் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தினை சில பந்துகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார். ஆட்டத்தின் 4வது ஓவரை வீசிய இஷாந் சர்மா பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார் விராட் கோலி. இவர் 13 பந்துகளை எதிர்கொண்டு மூன்று சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி 27 ரன்கள் சேர்த்திருந்தார். அடுத்து வந்த ரஜித் படிதார் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடினார். இவரது அதிரடியான ஆட்டத்தினால் பல கேட்ச் வாய்ப்புகளையும் டெல்லி அணி வீரர்கள் வீணடித்தனர். இந்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்ட படிதார் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
வில் ஜாக்ஸும் தனது பங்கிற்கு அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அரைசதம் விளாசிய படிதார் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அடுத்து அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட வில் ஜாக்ஸ் 29 பந்தில் 41 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 137ஆக இருந்தது.
இதையடுத்து கேமரூன் க்ரீன் மற்றும் மகிபால் லோம்ரோர் கூட்டணி பொருமையாக விளையாடியதால் அணியின் ஸ்கோர் மந்தமாக நகர்ந்தது. ஆட்டத்தின் 17வது ஓவரில் கேமரூன் க்ரீன் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசி மிரட்டி விட, அதே ஓவரில் லோம்ரோர் ஒரு சிக்ஸர் விளாச இந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் குவித்தது.
ஆனால் அடுத்த ஓவரினை வீசிய கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த ஓவரில் லோம்ரோர் மற்றும் தினேஷ் கார்த்திக் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். இதில் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறக்கப்பட்ட இம்பேக்ட் ப்ளேயர் ஸ்வப்னல் சிங்கும் டக் அவுட் ஆக, பெங்களூரு அணி ரன்கள் எடுக்க சிரமப்பட்டது. இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் சேர்த்தது.