GT vs RCB Match Highlights: இடியாய் இடித்த வில் ஜேக்ஸ்; சுத்தமாக எடுபடாத குஜராத் பவுலிங்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB வெற்றி!
IPL 2024 GT vs RCB Match Highlights: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்கள் குவித்தது.
அடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் இன்னிங்ஸை கேப்டன் டூ ப்ளெசிஸ் மற்றும் விராட் கோலி தொடங்கினர். இருவரும் முதல் ஓவரில் மட்டும் நிதானமாக ஆடினர். அதன் பின்னர் அதிரடிக்கு கியரை மாற்றிய கேப்டன் டூ ப்ளெசிஸ் அதிரடியாக சிக்ஸர் விளாசுவதில் கவனம் செலுத்தி வந்தார். இதனால் சாய் கிஷோர் பந்தில் சிக்ஸர் விளாச முயற்சி செய்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
அதன் பின்னர் கைகோர்த்த விராட் கோலி மற்றும் வில் ஜாக்ஸ் கூட்டணியை குஜராத் அணியின் பந்து வீச்சாளர்களால் பிரிக்கவே முடியவில்லை. இருவரும் சிறப்பாக திட்டமிட்டு குஜராத் பந்து வீச்சினை எதிர்கொண்டனர். விராட் கோலி அதிரடியாக விளையாடுவதில் கவனம் செலுத்த, வில் ஜேக்ஸ் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்திவந்தார்.
இதனால் இவர்கள் கூட்டணியை எப்படி பிரிப்பது எனத் தெரியாமல் திணறினார் குஜராத் கேப்டன் சுப்மன் கில். அதிரடியாக விளையாடிவந்த விராட் கோலி தனது அரைசதத்தினை 31 பந்தில் எட்டினார். இந்த சீசனில் விராட் கோலி அடிக்கும் 4வது அரைசதமாக இது பதிவாகியுள்ளது. தனது அனுபவத்தைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஒரு கட்டத்திற்கு மேல் வில் ஜேக்ஸிற்கு அதிகமாக ஸ்ட்ரைக் கொடுத்தார்.
இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட வில் ஜேக்ஸ் 31 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். ஆட்டத்தின் 15வது ஒவரில் மட்டும் வில் ஜேக்ஸ் மூன்று சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரி பறக்கவிட்டார். அடுத்த ஓவரில் வில் ஜேக்ஸ் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி பறக்கவிட்டார். 31 பந்துகளில் அரைசதம் எட்டிய வில் ஜேக்ஸ் அடுத்த 10 பந்துகளில் சதத்தினை எட்டினார். வில் ஜேக்ஸ் இந்த ஆட்டத்தில் 5 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் விளாசியிருந்தார். இதற்கிடையில் விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் 500 ரன்களை எட்டினார்.
இறுதியில் 16 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 206 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில் ஜேக்ஸ் 41 பந்தில் தனது சதத்தினை எட்டினார்.