IPL 2023: ஐபிஎல் அடையாளப்படுத்திய பஞ்ச பாண்டவர்கள்.. விரைவில் இந்திய அணியில் பார்க்கலாம்..!
ஐபிஎல் போட்டியில் அடையாளம் காணப்பட்டு இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள் பலர். ஆண்டு தோறும் இளம் திறமையாளர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அவர்களை உச்சம் தொடவைக்கும் பெரும் பணியை ஐபிஎல் செய்கிறது
ஐபிஎல் போட்டியில் அடையாளம் காணப்பட்டு இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள் பலர். ஆண்டு தோறும் இளம் திறமையாளர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அவர்களை உச்சம் தொடவைக்கும் பெரும் பணியை ஐபிஎல் தொடர் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இந்த ஆண்டு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால்
மும்பையின் தெருக்களில் பானி பூரி விற்றுக்கொண்டே கிரிக்கெட்டின் உச்சம் தொட கனவு கண்ட நாயகன் தான் தற்போது ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால். மிகவும் ஆர்வமுள்ள துடிப்பு மிக்க இளைஞனாக அறியப்படும் இவர் சமீபத்தில் பலமான மும்பை அணிக்கு எதிராக சிக்ஸர் மழை பொழிந்ததை, போட்டியை வென்ற மும்பை அணி வீரர்கள் இன்னும் மறந்து இருக்கமாட்டார்கள். இந்த ஐபிஎல் சீசன் தொடங்கப்பட்டது முதல் சிறப்பாக விளையாடி வரும் இவர் இதுவரை 428 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதமும் மூன்று அரைசதங்களும் அடங்கும். அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். இடது கை பேட்ஸ்மேனான இவர் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவின் கவனத்தினை ஈர்த்துள்ளார்.
திலக் வர்மா
கடந்த சீசன் முதல் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் தடுமாறி வருகிறது. ஆனால் தொடர்ந்து நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருபவர், மும்பை அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா. மும்பை அணியில் யார் சோதப்பினாலும் திலக் வர்மா நிலைத்து விளையாடுவார் என ரசிகர்களுக்கு மட்டுமல்லாது வர்ணையாளர்களிடம் நம்பிக்கை பெற்றுள்ள திலக் வர்மாவும் இடது கை பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிங்கு சிங்
நடப்புச் சாம்பியன் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளையும் சிக்ஸருக்கு மாற்றி கொல்கத்தா அணியை வெற்றி பெறச்செய்தவர் ரிங்கு சிங். இந்த சீசன் அடையாளப்படுத்திய முக்கியமான வீரர்களில் இவரும் ஒருவர். இடது கை பேட்ஸ் மேனான இவர் மிடில் ஆர்டரில் சிறப்பாக ரன்கள் குவிக்கும் திறனை வைத்துள்ளார். இவர் மீது கொல்கத்தா அணி வைத்துள்ள நம்பிக்கை தான் எதிரணிகளுக்கான அச்சுறுத்தல் எனலாம். களத்தில் ரிங்கு சிங் இருக்கிறார் என்றால் போட்டி இன்னும் நம் வசம் தான் இருக்கிறது எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள இவர் இந்திய அணியின் ஜெர்சியில் மிக விரைவில் பார்க்கலாம்.
சுயாஷ் சர்மா
கொல்கத்தா அணியின் இளம் பந்து வீச்சாளரான சுயாஷ் சர்மா அந்த அணியின் புது நம்பிக்கையாக திகழ்கிறார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவரை கொல்கத்தா அணி துருப்புச் சீட்டாக பயன்படுத்தி வருகிறது. ஒரு சில பந்துகள் தவறான லைனில் வீசினாலும், அதனை அடுத்த பந்தில் சரி செய்து கொள்ளும் திறனைக் கொண்டுள்ளார். மிகவும் இளம் வீரரான இவரும் வருங்கால இந்திய அணியில் தடம் பதிப்பார்.
மயாங்க் மார்கண்டே
இந்த சீசனில் மிகவும் திணறிக்கொண்டு உள்ள அணி என்றால் அது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தான். ஆனால் அந்த அணியில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருபவர் இளம் சுழற்பந்து வீச்சாளர் மயாங்க் மார்கண்டே தான். 6 போட்டிகளில் களமிறங்கி 24 ஓவர்கள் வீசியுள்ள இவர் 154 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பந்து வீச்சுக்கு சவாலான ஆடுகளங்களில் விக்கெட்டுகள் வீழ்த்த முயற்சிப்பதுடன், ரன்கள் விட்டுக்கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்து வீசிவருகிறார்.