Harry Brook Profile: இந்த சீசனின் முதல் சதம் அடித்த ஹாரி ப்ரூக்.. யார் தெரியுமா? ஐபிஎல்லில் நுழைந்தது எப்படி?
ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஹாரி புரூக் அவர் 55 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 100 ரன்கள் குவித்தார்.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைடர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி தொடக்க ஆட்டக்காரர் ஹாரி புரூக் சதத்துடன் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கொல்கத்தா அணி சார்பில் கேப்டன் நிதிஸ் ராணா 75 ரன்களும், ரிங்கு சின் 58 ரன்களும் எடுத்திருந்தனர்.
இந்தநிலையில், ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஹாரி புரூக் அவர் 55 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 100 ரன்கள் குவித்தார். இந்த ஐபிஎல் சீசனின் முதல் சதம் இதுவாகும். இப்படி இருக்க இந்த நட்சத்திர வீரர் ஹாரி புரூக் யார், அவர் எப்படி ஐபிஎல்-ல் நுழைந்தார் என்பதைப் பற்றி பார்க்கலாம்..
யார் இந்த ஹாரி புரூக்..?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹாரி புரூக் 22 பிப்ரவரி 1999 ம் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ள யார்க்ஷயரில் பிறந்தவர். புரூக் இங்கிலாந்து அண்டர்-19 அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
கடந்த 2020 ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற டி20 பிளாஸ்ட் போட்டியில் தனது அதிரடியால் வெளிச்சத்திற்கு வந்தார். தொடக்க வீரராக களமிறங்கி அசத்திய இவர், மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் போது சராசரியாக 55 ரன்கள் எடுத்து தான் யார் என்பதை நிரூபித்தார். தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தால் முன்னணி பாதையில் நடையைக்கட்டினார். புரூக்கின் நுண்ணிய பேட்டிங் திறமை மற்றும் நல்ல பார்ம் காரணமாக கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார்.
தொடர்ந்து, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தற்போது ஹாரி புரூக் இங்கிலாந்து அணியின் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்.
பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி:
சமீபத்தில் இங்கிலாந்து பாகிஸ்தானுக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இடம்பெற்றிருந்த ஹாரி புரூக் மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் உள்பட 486 ரன்கள் குவித்தார். இவரது சராசரியும் 93.60 ஆக இருந்தது. இதையடுத்து, ஹாரி புரூக் தொடர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடருக்கு பிறகுதான் ஹாரி புரூக் உலகம் முழுவதும் தெரிய தொடங்கினார்.
ஐபிஎல் 2023 ஏலம்:
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2023 ஏலத்தில் ஹாரி புரூக் தனது பெயரை பதிவு செய்திருந்தார். இதில், புரூக் தனது அடிப்படை விலையான ரூ.1.5 கோடியை நிர்ணயம் செய்தார். எனவே, புரூக் பேட்டிங் திறமையை பார்த்த அணிகள், நீ.. நான்.. என்று அவரை ஏலத்தில் எடுக்க போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆரம்பத்தில் இருந்தே ஹாரி புரூக்கை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆர்வம் காட்டியது. ஆர்சிபி அணியும் இவரை எடுக்க ரூ.4.80 கோடி வரை சென்று பின்வாங்கியது. பெங்களூர் ஏலத்தில் இருந்து பின்வாங்கியபோது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலத்தில் நுழைந்தது. ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் இடையே ஹாரி புரூக்கை எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில், ஹைதராபாத் அணி புரூக்கை ரூ.13.25 கோடிக்கு ஏலம் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.