(Source: ECI/ABP News/ABP Majha)
Sanjay Manjrekar On Shubman Gill: தலைமுறைக்கு ஒருவர்தான் நாயகன்.. இந்த தலைமுறைக்கு சுப்மன் கில் - பாராட்டித் தள்ளும் சஞ்சய் மஞ்சுரேக்கர்..!
Shubman Gill: லீக் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஐபிஎல் சதத்தினை எட்டிய சுப்மன் கில் அதன் பின்னர் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சேஸிங்கில் அசத்தலான சதம் விளாசினார்.
இந்த ஐபிஎல் சீசன் இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணம். இந்திய அணியின் இளம் வீரர்கள் இந்த ஆண்டு மிகவும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இன்னும் இந்திய அணியில் இடம் பிடிக்காத ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு பெரும் நம்பிகையை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் சீசனின் தொடக்கத்தில் இருந்து இவர்களைப் பற்றி பேசி வந்திருந்தாலும், சீசனின் தான் களமிறங்கிய கடைசி நான்கு போட்டிகளில் (இதுவரை) மூன்று சதங்கள் விளாசியுள்ளார், குஜராத் டைட்டன்ஸ் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்.
லீக் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஐபிஎல் சதத்தினை எட்டிய சுப்மன் கில் அதன் பின்னர் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சேஸிங்கில் அசத்தலான சதம் விளாசினார். இதனால் அடுத்தடுத்த போட்டியில் சதம் விளாசிய வார்னர், ஷிகர் தவான் மற்றும் விராட் கோலியுடன் இணைந்து கொண்டார்.
அதன் பின்னர் நடைபெற்ற குவாலிஃபையர் இரண்டாவது சுற்றில் மும்பை அணிக்கு எதிராகவும் சதம் விளாசி அட்டகாசப்படுத்தியுள்ளார். இதன் மூலம் குஜராத் அணி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியதுடன் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தற்போது உச்சரிக்கும் பெயராக இருப்பது சுப்மன் கில், கவனிக்கப்படும் நபராக இருப்பதும் சுப்மன் கில் தான்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், சுப்மன் கில் குறித்துப் கூறியுள்ள கருத்து அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர் கூறியுள்ளதாவது, “ ஒரு தலைமுறைக்கு ஒருவர் மட்டும் தான் தலைசிறந்த வீரராக வளம் வருவார் தற்போதைய இளம் தலைமுறையில் அப்படி வளம் வரப்போகிறவர் சுப்மன் கில்” என கூறியுள்ளார். மேலும் அவர், ”இந்தியாவுக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடும் சுப்மன் கில், ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியிலும் இந்திய அணிக்காக துவக்க வீரராக களமிறங்கவுள்ளார். இவரது சிறப்பான ஆட்டம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தொடரும் என நம்பலாம்” என கூறியுள்ளார்.
இந்திய அணி அடுத்த மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் விளையாடவுள்ளது. அதேபோல், அடுத்த ஐந்து மாதங்களில் உலகக் கோப்பை போட்டியில் விளையாடவுள்ளது. இந்நிலையில் சுப்மன் கில் உள்ளிட்ட இளம் வீரர்களின் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.