Rohit sharma: ஐபிஎல் தொடரில் தோனிக்கு பின் ரோகித் தான்.. கேப்டன்சியில் படைக்க உள்ள புதிய சாதனை
ஐபிஎல் தொடரில் கேப்டன்சியில் ரோகித் சர்மா புதிய சாதனை படைக்க உள்ளார்.
ஐபிஎல் தொடரில் கேப்டன்சியில் ரோகித் சர்மா புதிய சாதனை படைக்க உள்ளார். அதன்படி, தொடர்ந்து 10வது ஆண்டாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா இந்த தொடரில் கேப்டனாக செயல்பட உள்ளார்.
கேப்டன்சியில் ரோகித் சர்மா:
ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக வலம் வருகிறார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா. கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் பாதியில், ரிக்கி பாண்டிங்கிடமிருந்து மும்பை அணியின் கேப்டன் பதவியை ரோகித் சர்மா கைப்பற்றினார். அதே சூட்டில் மும்பை அணிக்கான முதல் கோப்பையையும் வென்று, முன்னாள் கேப்டன் சச்சினை மகிழ்சியுடன் ஓய்வு பெற செய்தார். அன்று தொடங்கிய ரோகித் சர்மாவின் வெற்றிப் பயணம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. மேலும், ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டனாகவும் உருவெடுத்துள்ளார்.
புதிய சாதனை:
2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா, நடப்பாண்டுடன் கேப்டனாக 10 ஆண்டுகளை பூர்த்தி செய்ய உள்ளார். அதாவது மும்பை அணியின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்று, நடப்பாண்டுடன் 10 ஆண்டுகள் எட்டப்பட உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு தொடர்ந்து 10 ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்டவர் எனும் பெருமையை, சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு பிறகு தற்போது ரோகித் சர்மா பெற்றுள்ளார். முன்னதாக பெங்களூரு அணிக்கு கோலி 9 ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்டு இருந்த நிலையில், அந்த சாதனையை ரோகித் சர்மா தகர்த்துள்ளார்.
5 முறை கோப்பை வென்ற ரோகித்
2013ம் ஆண்டு தொடங்கி ரோகித் சர்மா தலைமையில் செயல்பட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. குறிப்பாக 2013, 2015, 2017 மற்றும் 2019ம் ஆண்டு ஆகிய ஒற்றைப்படை ஆண்டுகளில் அடுத்தடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது. இதனால், ஒற்றைப்படை ஆண்டுகளில் மட்டுமே மும்பை அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2020ம் ஆண்டும் கோப்பையை வென்று அசத்தியது. இதன் மூலம், அடுத்தடுத்து இரண்டு முறை கோப்பையை வென்ற ஒரே அணி என்ற சென்னையின் சாதனையை மும்பை அணி சமன் செய்தது. மேலும், ஐபிஎல் தொடரில் அதிகமுறை கேப்பையை வென்ற கேப்டன் எனும் சாதனையையும் ரோகித் சர்மா தனதாக்கினார்.
ஐபிஎல் வெற்றிகள்:
ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணி இதுவரை 143 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 79 போட்டிகளில் வெற்றி, 60 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. 4 போட்டிகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதோடு, ரோகித் சர்மா தலைமையில் இதுவரை 6 முறை மும்பை இந்தியன்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதேநேரம் 4 முறை மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. குறிப்பாக மும்பை அணியின் மோசமான ஆண்டாக, கடந்த ஆண்டு அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.