Harshal Patel Mankad: வாரி வழங்கிய ரன்கள்.. மன்கட் முயற்சி.. தன்னம்பிக்கையை இழந்துவிட்டாரா ஹர்ஷல்..?
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ரன்களை வாரி வழங்கிய ஹர்ஷல் படேல் மன்கட் முறை செய்ய முயற்சித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
16வது சீசன் ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக இந்தியாவின் முன்னணி நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆர்.சி.பி. – லக்னோ போட்டி ரசிகர்களுக்கு மறக்க முடியாத போட்டியாக அமைந்தது.
மன்கட் முயற்சி:
212 ரன்கள் இலக்கை நோக்கி லக்னோ அணி பேட்டிங் செய்தபோது ஏராளமான திருப்பங்கள் அரங்கேறியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்னோ அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றாலும் ஹர்ஷல் படேலின் செயலால் ஆர்.சி.பி. அணியை சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
வெற்றிக்கு 1 பந்தில் 1 ரன்னே தேவைப்பட்ட சூழலில், கடைசி பந்தை வீசிய ஹர்ஷல் படேல் பந்தை வீசாமல் மன்கட் செய்ய முயற்சித்தார். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. கிரிக்கெட் விதிப்படி மன்கட் முறையானது வெற்றிக்கு அனுமதிக்கப்பட்ட முறை என்றாலும், கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களும், அறத்தின்படி விளையாட நினைக்கும் வீரர்களும் மன்கட் முறையை பெரும்பாலும் விரும்புவதில்லை.
விளாசிய ஸ்டோய்னிஸ், பூரண்:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல். தொடரில் அருமையாக பந்துவீசி இந்திய அணி வரை இடம்பிடித்த ஹர்ஷல் படேல், நேற்றைய போட்டியில் எதிர்முனையில் பேட் செய்த பந்துவீச்சாளர் ஆவேஷ்கானை அவுட்டாக்க முயற்சிக்காமல் பதோனியை மன்கட் செய்ய முயற்சித்தது ஹர்ஷல் படேல் தன் மீதான தன்னம்பிக்கையை இழந்துவிட்டதையே காட்டுகிறது.
ஒரு சிறந்த பந்துவீச்சாளரோ, பேட்ஸ்மேனோ நேருக்கு நேர் மோதி வெற்றி பெறவே முயற்சிப்பார்கள். இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு மேயர்ஸ், தீபக்ஹூடா, க்ருணால் பாண்ட்யா சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்த கேப்டன் கே.எல்.ராகுலும் பொறுப்பற்ற முறையில் அவுட்டாக மார்கஸ் ஸ்டோய்னிசும், நிகோலஸ் பூரணும் சிக்ஸர் மழையை பொழிந்தனர்.
தன்னம்பிக்கையை இழந்தாரா ஹர்ஷல்?
குறிப்பாக, ஹர்ஷல் படேல் ஓவரில் விளாசு, விளாசு என்று விளாசினர். இதனால், கடும் நெருக்கடியில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் பந்துவீசிய ஹர்ஷல் படேல் எப்படியாவது தன் அணியை வெற்றி பெற வைத்துவிட வேண்டும் என்பதற்காகவே மன்கட் முறையை இறுதி அஸ்திரமாக கையில் எடுத்தார் என்பது தெரிகிறது. ஆனால், பதற்றத்திலே இருந்த அவர் அதையும் சரியாக செய்ய முடியவில்லை.
கடைசி பந்தை சரியாக வீசியும் ஆவேஷ்கான் அதற்குள் ரன் ஓடிவிட்டதால் லக்னோ அணி வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் மட்டும் ஹர்ஷல் படேல் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் 48 ரன்களை வாரி வழங்கினார். மொத்தத்தில் அவர் ஹர்ஷல் படேல் இறுதி அஸ்திரமாக மன்கட்டை கையில் எடுத்தபோது அவர் தன்மீதான தன்னம்பிக்கையை இழந்துவிட்டதாகவே கருத தோன்றுகிறது.
ரசிகர்கள் ஏற்பார்களா?
32 வயதான ஹர்ஷல் படேல் இதுவரை 81 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 101 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் தொடங்கியது முதலே பந்துவீச்சில் சொதப்பி வரும் ஹர்ஷல் படேல் மீண்டும் தன்னம்பிக்கையுடன் கம்பேக் அளிப்பார் என்று எதிர்பார்க்கலாம். மேலும், மன்கட் முறையில் ஆர்.சி.பி. அணி போட்டியை அவர் சமன் செய்ய வைத்திருந்தாலும் அதை விராட்கோலி, டுப்ளிசிஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் மட்டுமின்றி அவர்களது ரசிகர்களும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.