Faf du Plessis Fined: இனி இப்படி செஞ்சீங்கனா பெங்களூரு அணியின் கேப்டனாக இருக்க முடியாது - டூ ப்ள்ஸியை எச்சரித்த ஐபிஎல் நிர்வாகம்..!
மெதுவாக பந்து வீசியதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டூ ப்ளஸிஸ்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் இந்த ஆண்டு ஒரு சில புதிய விதிமுறைகளை பிசிசிஐ கொண்டு வந்தது. அவை அனைத்தும் போட்டியின் தன்மையை மற்றும் போக்கினை மாற்றும் அளவிற்கான விதிமுறைகள் ஆகும். அதாவது, 11 பேக் கொண்ட இந்த விளையாட்டில் 12வதாக இம்பேக்ட் ப்ளேயராக ஒருவரை அணிக்குள் சேர்த்து விளையாட முடியும். அவர் ஏற்கனவே அணியில் உள்ள ஒரு வீரருக்கு பதிலாக மாற்று வீரராக களமிறங்குவார். அதேபோல், நோ-பால் மற்றும் வைய்டுகளுக்கு ரிவ்யூ கேட்க முடியும். மேலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் (90 நிமிடங்கள்) பந்து வீசாமல் மொதுவாக பந்து வீச்சினால், அவுட் ஃபீல்டில் அதாவது, 30 யார்டுக்கு வெளியில் 4 ஃபீல்டர்கள் மட்டும் தான் நிறுத்த முடியும், அடுத்த போட்டியில் ஒரு அணி மீண்டும் இந்த தவறைச் செய்தால் அந்த அணியின் கேப்டன் ஒரு போட்டியில் விளையாட அனுமதிக்கப்படமாட்டார். இப்படியான புதிவித விதிமுறைகளை பிசிசிஐ இம்முறை அறிமுகப்படுத்தியது.
இந்த ஐபிஎல் தொடரில் நேற்று அதாவது, ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 212 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணி சார்பில் டாப் 3 பேட்ஸ் மேன்கள் அரை சதம் விளாசினர்.
அதன் பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சி காத்து இருந்தது. பவர்ப்ளேவிற்குள் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இந்த போட்டியில் பெங்களூரு அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால், இந்த எண்ணங்களுக்கு முடிவு கட்டும் விதமாக லக்னோ அணியின் ஸ்டாய்னஸ் மற்றும் பூரான் ருத்ரதாண்டவ ஆட்டத்தினால் லக்னோ அணி வெற்றியை நெருங்கியது. பெங்களூரு அணி இவர்களை அவுட் செய்வதற்கு அதிகப்படியான திட்டங்களை தீட்டினர். இதனால் ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்குமான நேர இடைவெளி அதிகமானது.
கடைசி இரண்டு ஓவர்களில் 15 ரன்கள் வெற்றிக்கு தேவை என இருந்த போது களத்தில் லக்னோ அணியின் பந்து வீச்சாளர்கள் தான் இருந்தனர். கடைசி ஓவரை வீசும் போது பெங்களூரு அணிக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதால், அவுட் ஃபீல்டில் 4 பேரை மட்டுமே ஃபீல்டிங்கிற்கு நிறுத்தியது. ஆனால் இறுதியில் இந்த போட்டியில் லக்னோ அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் காலதாமதாமாக பந்து வீசிய காரணத்தினால் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டூ ப்ளஸிஸ்க்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து ரூபாய் 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை பெங்களூரு அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசத் தவறினால், அந்த அணியின் கேப்டன் ஃபாப் டீ ப்ளஸிஸ் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். அதேபோல், வெற்றி பெற்ற ஆவேசத்தில் லக்னோ அணியின் வீரர் ஆவேஷ்கான் ஹெல்மெட்டை தூக்கி வீசினார். ஐபிஎல் விதிமுறைகளின் படி, இது முதல் நிலை குற்றமாகும். அவருக்கும் ஐபிஎல் நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.