IPL 2023: ஜடேஜா சிஎஸ்கேவை விட்டு வெளியேற தோனிதான் காரணமா? நடந்தது என்ன?
IPL 2023: ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியை விட்டு வெளியேற தோனிதான் காரணம் எனவும், மீண்டும் அணிக்குள் ஜடேஜா வரவும் தோனிதான் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
IPL 2023: ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியை விட்டு வெளியேற தோனிதான் காரணம் எனவும், மீண்டும் அணிக்குள் ஜடேஜா வரவும் தோனிதான் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
ஐபிஎல் போட்டியின் மிகவும் பலமான அணியாக இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அதற்கு மிகவும் முக்கிய காரணம் அந்த அணி தனது கோர் டீமை பெரும்பாலும் தக்கவைத்துள்ளது என்பதால் தான். ஐபிஎல் தொடக்க காலத்தில் இருந்து பார்ப்பவர்கள் சென்னை அணி என்றாலே தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ என இவர்களின் பெயர்களை அடுக்கி விடுவார்கள். சென்னை அணி தொடங்கியது முதல் இன்று வரை அந்த அணியின் கேப்டனாக தோனி தான் இருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தைப் பிடிக்க முக்கிய காரணம் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகிக் கொண்டதும், அதன் பின்னர் அந்த பொறுப்பு ஜடேஜாவிடம் கொடுக்கப்பட்டதும் தான் என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்ட பின்னர் தோனி ஒரு வீரராக மட்டும் தான் அணியில் தொடர்ந்தார். ஜடேஜா தலைமையேற்ற போட்டிகளில் சென்னை அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் கேப்டன் பொறுப்பு மீண்டும் தோனி வசமே வந்தது. கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட தோனி, ஜடேஜா வீரராக அணிக்கு தனது பங்கை முழுவதும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.
இதனால், மிகவும் மனமுடைந்த ஜடேஜா மேற்கொண்டு தொடரில் விளையாடவில்லை. மேலும் ஜடேஜா தனது சமூகவலைதளப் பக்கங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பின் தொடர்வதையும் நிறுத்திக் கொண்டார். இதனால் தோனி, சிஎஸ்கே அணி நிர்வாகம் என இவர்களிடத்தில் ஜடேஜாவுக்கு பெரும் கருத்து வேறுபாடு இருந்தது.
இதனால் ஜடேஜா சென்னை அணிக்காக விளையாடமாட்டார் என கூறப்பட்டது. இறுதியில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்திற்குப் பின்னர் சிஎஸ்கே அணி நிர்வாகமும் தோனியும் ஜடேஜாவிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில், ஜடேஜா அணி நிர்வாகத்தின் மீது இருந்த அதிருப்தியை விடவும் தோனி மீதான அதிருப்திதான் அதிகமாக இருந்துள்ளது என கூறப்படுகிறது. இறுதியில் ஜடேஜாவை சமாதனப்படுத்திய தோனி, ஜடேஜா மீண்டும் அணிக்குள் வர காரணமாகவும் இருந்துள்ளார்.
வரும் 31ஆம் தேதி சென்னை அணி தனது முதல் போட்டியில், நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் உடன் மோதவுள்ளது. இதுவே தோனியின் கடைசி சீசன் என்பதால், அடுத்த கேப்டன் பொறுப்பு மீண்டும் ஜடேஜாவுக்கே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.