IPL 2023 Playoff Scenario: திக்.. திக்.. மொமெண்டில் ரசிகர்கள்.. இறுதி கட்ட போரில் அணிகள்; Play-offக்குள் நுழையப்போவது யார்?
IPL 2023 Playoff Scenario: ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளின் முடிவுகள் ஒரு அணிக்கு எந்தமாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தும் என காணலாம்.
IPL 2023 Playoff Scenario: இந்த ஆண்டில் இருந்து தான் ஒருவர் ஐபிஎல் பார்க்க தொடங்கி இருக்கிறார் என்றால் அவர் நிச்சயம் தன் வாழ்நாள் முழுவதும் இந்த ஐபிஎல் குறித்த உரையாடலை நிறுத்த மாட்டார். அதற்கு காரணம் இதற்கு முன்னர் எந்த ஐபிஎல் தொடரிலும் இல்லாத அளவுக்கு 16வது ஐபிஎல் சீசன் உள்ளது என்பது தான். லீக் போட்டிகள் 75 சதவீதம் முடிந்த பின்னரும் களத்தில் உள்ள 10 அணிகளுக்கும் ப்ளேஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு உள்ளது என்பது இந்த தொடரில் தான் முதல்முறை. இவையெல்லாம் ஒரு புறம் இருக்க சென்னை அணி இந்தியாவில் உள்ள மைதானத்தில் எங்கு சென்று விளையாடினாலும் மைதானத்தினை நிரப்பிடும் தோனி ரசிகர்களைப் பார்க்கும் போது இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் யாரும் பெறாத அங்கீகாரத்தினை ரசிகர்கள் மத்தியில் தோனி பெற்றிருக்கிறார் என்பதை காட்டுகிறது. இந்நிலையில் எப்போதும் சென்னை அணியின் வெற்றிக்கு காத்திருக்கும் சென்னை ரசிகர்கள் நேற்று- நடந்த பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டனர். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணி போட்டியில் வெற்றி பெற்று இருந்தால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள சென்னை மற்றும் லக்னோ அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றிருக்கும். நேற்றைய போட்டியில் பெற்ற வெற்றி மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணியைப் பொறுத்த மட்டில் தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் அணியை வென்றால் நேரடியாக ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். மாறாக தோல்வியைச் சந்தித்தால், ஹைதராபாத் அணியுடனான போட்டியில் மும்பை அணி தோல்வியைச் சந்திக்க வேண்டும், அப்போது தான் பெங்களூரு அணியால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
சென்னை - லக்னோ அணிகள்
இரண்டு அணிகளும் தலா 15 புள்ளிகளுடன் உள்ளன. சென்னை அனி டெல்லி அணியுடனான போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும். ஒருவேளை தோல்வியைச் சந்தித்தால் மும்பை அல்லது பெங்களூரு அணிகளில் ஒரு அணி தனக்கு மீதமுள்ள போட்டியில் தோல்வியைச் சந்திக்க வேண்டும். லக்னோ அணிக்கும் இதே நிலைதான்.
மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் மீதமிருக்கும் ஒற்றைப் போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும். ஆனால் இது மட்டும் மும்பை அணியை அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்லாது. பெங்களூரு, லக்னோ மற்றும் சென்னை இந்த அணிகளில் ஏதேனும் ஒரு அணி தங்களுக்கு மீதமுள்ள போட்டியில் தோல்வியைச் சந்திக்க வேண்டும்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
12 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியை மிகப்பெரிய வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். மேலும், பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் தங்களுக்கு மீதமுள்ள போட்டியில் தோல்வியைச் சந்திக்க வேண்டும்.
கொல்கத்தா மற்றும் பஞ்சாப்
இந்த இரு அணிகளும் கிட்டத்தட்ட ப்ளேஆஃப் சுற்றினை இழந்து விட்டது. இந்த இரு அணிகளும் தனக்கு மீதமுள்ள ஒரு போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வென்று தங்களது ரன்ரேட்டை நேர்மறைக்கு (+) மாற்றுவதுடன் அது பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளை விடவும் அதிகமாக மாற்ற வேண்டும். மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மீதமுள்ள போட்டிகளில் தோல்வியைச் சந்திக்க வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் இரு அணிகளில் ஒரு அணி ரன் ரேட் அடிப்படையில் உள்ளே செல்லும்.
நடப்பாண்டு தொடரில் முதல் அணியாக ப்ளேஆஃப்க்கு குஜராத் அணி தகுதி பெற்றுள்ளது. அதேபோல் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினை ஏற்கனவே இழந்து விட்டன.