DC vs PBKS, 1 Innings Highlights: சதம் விளாசிய ப்ரப்சிம்ரன்.. 168 ரன்கள் இலக்கை எட்டுமா டெல்லி?
IPL 2023, DC vs PBKS: 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 7 அணி விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியின் சார்பில் ப்ரப்சிம்ரன் 103 ரன்கள் குவித்திருந்தார்.
ஐபிஎல் தொடரில் இன்று (மே, 13) நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் வார்னர் தனது அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார்.
அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. டெல்லி அணியின் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு இந்த போட்டி ஐபிஎல் தொடரில் 100வது போட்டி. பவர்ப்ளேவில் இரண்டு ஓவர்கள் வீசிய அவர் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் லிவிங்ஸ்டன் விக்கெட்டை கைப்பற்றினார். அதன் பின்னர் ஜிதேஷ் சர்மாவின் விக்கெட்டை அக்ஷர் பட்டேல் கைப்பற்ற, பவர்ப்ளேவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தடுமாறியது.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தாலும் தொடக்க வீரராக களமிறங்கிய ப்ரப்சிம்ரன் பொறுப்புடன் ஆடினார். இவருடன் கைகோர்த்த சாம் கரன் நிதானமாக ஆட, மேற்கொண்டு 9 ஓவர்களில் இருவரும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டனர். போட்டியின் 11வது ஓவரில் ப்ராப்சிம்ரன் இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். இந்த ஓவரை மிட்ஷெல் மார்ஷ் வீசினார். இதனால் பஞ்சாப் அணி 100 ரன்களை 13.1 ஓவரில் எட்டியது. சிறப்பாக ஆடி வந்த தொடக்க ஆட்டக்காரர் ப்ரப்சிம்ரன் 42 பந்தில் அரைசதம் விளாசிள்ளார். தனது அரைசதத்தினை கடந்த பின்னர் அதிரடிக்கு கியரை மாற்றிய ப்ரப்சிம்ரன் போட்டியின் 17வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் பந்து வீச்சில் அடுத்தடுத்து பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாசி டெல்லி அணியை மிரட்டினார்.
இவரது விக்கெட்டை கைப்பற்ற டெல்லி அணியின் கேப்டன் வார்னர் தன்னிடம் இருந்த 6 பந்து வீச்சாளர்களையும் பயன்படுத்தினார். ஆனால் அவர்களால் ப்ரப்சிம்ரனின் விக்கெட்டை கைப்பற்ற முடியவில்லை. தனது அரைசத்தினை 42 பந்தில் எடுத்த ப்ரப்சிம்ரன் அதன் பின்னர் அதிரடிக்கு கியரை மாற்றி தனது முதல் ஐபிஎல் சதத்தினை 61 பந்தில் எட்டினார். இவரது சதத்தினால் 18 ஓவரில் 150 ரன்களைக் கடந்த பஞ்சாப் அணி மேற்கொண்டு மீதம் இருந்த 2 ஓவர்களிலும் அதிரடியாக விளையாட முயற்சி செய்தது. ஆனால் 19 ஓவரை வீசிய முகேஷ் குமார் பந்து வீச்சில் தவறான ஷட்டினால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 7 அணி விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியின் சார்பில் ப்ரப்சிம்ரன் 103 ரன்கள் குவித்திருந்தார். டெல்லி அணியின் சார்பில் இஷாந்த் சர்மா மட்டும் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.