(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2023, MI vs RCB: ஆர்ச்சர் அறிமுகம்.. மீண்டும் சறுக்கிய சூர்யா.. கோலி-ஃபாஃப் டு பிளிசி பார்ட்னர்ஷிப்.. சில முக்கிய தருணங்கள்!
மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக 11வது முறையாக சீசனின் முதல் போட்டியில் தோல்வி அடைந்து மோசமான சாதனையை படைத்தது.
ஐபிஎல் 2023 தொடரின் 5 வது போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதி கொண்டனர். இதில் 172 ரன்களை பெங்களூர் அணி அசால்ட்டாக சேஸ் செய்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக 11வது முறையாக சீசனின் முதல் போட்டியில் தோல்வி அடைந்து மோசமான சாதனையை படைத்தது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. பின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மா 84 ரன்கள் குவித்து, 172 ரன்கள் பெங்களூரு அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. அதன்பிறகு, கோலி மற்றும் டு பிளிசி ருத்ர தாண்டவத்தால் பெங்களூர் அணி வெற்றிபெற்றது.
இந்தநிலையில், இரு அணிகளுக்கிடையேயான சில முக்கிய தருணங்களை இங்கே பார்க்கலாம்.
பவர்பிளேவில் ஆர்சிபி ஆதிக்கம்:
டி20 போட்டியில் முதல் ஆறு ஓவர்கள் பவர்பிளேவாக அறிவிக்கப்படும். அதில், பேட்டிங் செய்யும் அணி அதை அதைப் பயன்படுத்தி முடிந்தவரை அதிக ரன்களை எடுக்க வேண்டும், ஆனால் நேற்றைய போட்டியில் பெங்களூர்தான் இரண்டு பவர்பிளேவிலும் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தியது.
மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தபோது பவர்பிளேவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 29 ரன்கள் மட்டுமே எடுத்தது. இஷான் கிஷனை முகமது சிராஜ் வெளியேற்ற, இங்கிலாந்தின் ரீஸ் டாப்லி நான்காவது ஓவரில் கேமரூன் கிரீனை அவுட் செய்தார். தொடர்ந்து, மும்பை கேப்டன் ரோகித் சர்மாவை ஆகாஷ் தீப் வெளியேற்றினார்.
அதேபோல், இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில் பவர்பிளேவொ; அதிக ரன்கள் குவித்த ஜோடி விராட் கோலி - டூ பிளசிஸ் ஜோடி. விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது.
திலக் வர்மா:
மும்பை அணி முதல் மூன்று விக்கெட்களை இழந்தபோது திலக் வர்மா 46 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். அவரது பேட்டிங்கில் இருந்து 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் தெறித்தன. இவருடன் நேஹால் வதேரா அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க மும்பை அணி 171 ரன்களை எடுத்தது.
மீண்டும் சறுக்கிய சூர்யகுமார் யாதவ்..!
சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து மூன்று முறை டக் அவுட்டான சூர்யகுமார் யாதவ், இந்த போட்டியிலும் சொதப்பினார். தனது வழக்கமான அதிரடியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 15 ரன்களில் வெளியேறினார்.
நேற்று இவரது பேட்டிங்கில் இருந்து ஒரு பவுண்டரி மட்டுமே வந்தது. பிரேஸ்வெல்லின் பந்துவீச்சில் ஷாபாஸ் அகமதுவிடம் கேட்ச் ஆனார்.
கோலி-ஃபாஃப் டு பிளிசி பார்ட்னர்ஷிப்:
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கோலி-ஃபாஃப் டு பிளிசி முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தனர்.
மும்பை அணிக்காக ஆர்ச்சர் அறிமுகம்:
ஐபிஎல் 2022 ஏலத்தில் மும்பை அணியால் ஜோஃப்ரா ஆர்ச்சர் 8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். கடந்த சீசனில் காயம் காரணமாக முழு தொடரையும் இழந்த அவர், நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் முறையாக களமிறங்கினார்.
காயமடைந்த ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில் மும்பை அணியின் வேக தாக்குதலை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் விக்கெட் எதுவும் எடுக்காமல், 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுகொடுத்தார்.