IPL 2023: தொடக்க வீரர்களாக அதிக ரன்கள்.! ஆதிக்கம் செலுத்தும் இடது கை பேட்ஸ்மேன்கள் - முழு பட்டியல் இதோ!
ஐபிஎல் தொடரில் தொடக்க வீரர்களாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இடது கை பேட்ஸ்மேன்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட ஐ.பி.எல். தொடரின் 16 வது சீசன் வருகின்ற மார்ச் 31ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு ஒவ்வொரு அணியும் லீக் சுற்றுகளில் மீதமுள்ள 9 அணிகளுடனும் தலா 2 முறை மோதிக்கொள்ளும். லீக் சுற்றுகளின் முடிவுகளை பொறுத்து முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்குள் தகுதிபெறும்.
இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் தொடக்க வீரர்களாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இடது கை பேட்ஸ்மேன்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அதிலும், முதல் ஏழு இடங்களில் உள்ள வீரர்களில் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் இடது கை பேட்ஸ்மேன்கள் . அந்த பட்டியலின் முழு விவரங்களை கீழே பார்க்கலாம்.
தவான் மற்றும் டேவிட் வார்னர்:
ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான் முதலிடத்தில் உள்ளார். தவான் ஐ.பி.எல்.லின் அனைத்து சீசனிலும் விளையாடி 35.38 சராசரியிலும் 127.3 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 5837 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை, தவான் ஐ.பி.எல்.லில் 206 போட்டிகளில் 6244 ரன்கள் எடுத்துள்ளார். அதில் அவர் தொடக்க ஆட்டக்காரர்களாக 5837 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த வரிசையில் டேவிட் வார்னர் இரண்டாவது இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் இதுவரை 162 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 5881 ரன்கள் எடுத்துள்ளார். அதில் அவர் தொடக்க ஆட்டக்காரராக 41.48 சராசரி மற்றும் 142 ஸ்ட்ரைக் ரேட்டில் 5226 ரன்கள் எடுத்துள்ளார்.
கிறிஸ் கெய்ல்:
இந்த பட்டியலில் கிறிஸ் கெய்ல் தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன் குவித்தவர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஐபிஎல்லில் மொத்தம் கிறிஸ் கெய்ல் 142 போட்டிகளில் விளையாடி 4 ஆயிரத்து 965 ரன்கள் எடுத்துள்ளார். இதில் தொடக்க ஆட்டக்காரராக கெய்ல் 4480 ரன்கள் எடுத்துள்ளார்.
கவுதம் காம்பீர்:
முன்னாள் கே.கே.ஆர். கேப்டன் கவுதம் கம்பீர் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். ஐபிஎல்லில் 154 போட்டிகளில் விளையாடி 4217 ரன்கள் குவித்துள்ளார். இதில் தொடக்க ஆட்டக்காரராக கம்பீர் 3597 ரன்கள் குவித்தார். தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன்களை எடுத்ததன் அடிப்படையில் வலது கை பேட்ஸ்மேன்கள் ஐந்து, ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் உள்ளனர்.
பேட்ஸ்மேன் | ரன்கள் | சராசரி | ஸ்ட்ரைக் ரேட் |
ஷிகர் தவான் | 5837 | 35.38 | 127.3 |
டேவிட் வார்னர் | 5226 | 41.48 | 142 |
கிறிஸ் கெய்ல் | 4480 | 41.87 | 151.4 |
கௌதம் கம்பீர் | 3597 | 32.12 | 124.8 |
அஜிங்க்யா ரஹானே | 3595 | 34.24 | 122.5 |
கேஎல் ராகுல் | 3389 | 52.95 | 139.2 |
விராட் கோலி | 2972 | 41.86 | 134.5 |
அஜிங்க்யா ரஹானே:
ஐபிஎல்லில் தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன்கள் எடுத்தவர பட்டியலில் ரஹானே ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவர் 34.24 சராசரியில் 122.5 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 3595 ரன்கள் எடுத்துள்ளார். கே.எல்.ராகுல் 52.95 சராசரியுடன் 3389 ரன்கள் மற்றும் தொடக்க வீரராக 139.2 ஸ்ட்ரைக் ரேட்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலியும் ஏழாவது இடத்தில் உள்ளார். ஐ.பி.எல். தொடரில் கோலி தொடக்க ஆட்டக்காரராக 41.86 சராசரி மற்றும் 134.5 ஸ்ட்ரைக் ரேட்டில் 2972 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை நடந்த ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் குவித்தவர் கோலிதான். அவர் இதுவரை 223 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6624 ரன்கள் எடுத்துள்ளார்.