IPL 2023: ஐபிஎல் தொடரில் இன்று 2 ஆட்டங்கள்.. ஹைதராபாத் - ராஜஸ்தான், பெங்களூரு -மும்பை அணிகள் மோதல்
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. இன்றைய நாளில் 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய நாளில் 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதுவரை நடந்த 2 போட்டிகளில் சென்னை - குஜராத், லக்னோ - டெல்லி அணிகள் மோதிய நிலையில் இன்றைய நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
ஹைதராபாத் - ராஜஸ்தான் மோதல்
மாலை 3.30 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. ஹைதராபாத் அணியை பொறுத்தவரை கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டு பரிதாபமான நிலைக்குச் சென்றது. அதனால் அணியில் இந்த சீசனுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கேப்டன் கேன் வில்லியம்சன் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடி வரும் மார்க்ரம் இன்றைய போட்டியில் ஆட மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் அணியை வழி நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த அணியில் இடம் பெற்றுள்ள தென்னாப்பிரிக்க வீரர்கள் மார்கோ ஜேன்சன், ஹென்ரிச் கிளாசென் ஆகியோரும் அடுத்த ஆட்டத்தில் களமிறங்குவார்கள் என தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.
அதேசமயம் ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை கடந்தாண்டு 2வது இடம் பிடித்து அசத்தியது. சஞ்சு சாம்சன் தலைமையிலான அந்த அணி ஜோஸ் பட்லர், யுஸ்வேந்திர சாஹல், ஜோ ரூட், தேவ்தத் படிக்கல், ஹெட்மேயர், ஜேசன் ஹோல்டர் என வலுவான அணியாக திகழ்வதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 அணிகளும் இதுவரை 16 ஆட்டங்களில் மோதி தலா 8 முறை வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு -மும்பை ஆட்டம்
மற்றொரு ஆட்டம் இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பாப் டூ பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றது. இரண்டு அணிகளும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வலுவாக உள்ளது. ஆனால் பெங்களூரு அணியில் இடம் பெற்ற ஹேசில்வுட், ராஜத் படிதார் ஆகியோர் காயம் காரணமாக சில போட்டிகளில் ஆட மாட்டார்கள் என்பது அணிக்கு பின்னடைவாக உள்ளது.
இந்த பக்கம் பார்த்தால் 5 முறை சாம்பியன் என்ற சுவடே தெரியாத அளவுக்கு கடந்த முறை கடைசி இடத்துக்கு மும்பை அணி தள்ளப்பட்டது. குறிப்பாக முதல் 8 போட்டிகளும் அந்த அணி தோல்வியையே தழுவியது. இந்த சீசனில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா ஆட மாட்டாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் அணிக்கு திரும்பினாலும் அவரால் மும்பை அணி பந்துவீச்சு முழுமை பெறுமா என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 30 ஆட்டங்களில் மோதியுள்ளது. இதில் 17 போட்டிகளில் மும்பையும், 13 போட்டிகளில் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் மற்றும் ஜியோ சினிமா செயலியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.