GT vs PBKS Highlights: இறுதியில் சொதப்பிய பஞ்சாப்; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி..!
IPL 2023, GT vs PBKS: 20வது ஓவரின் ஐந்தாவது பந்தில் குஜராத் அணி 4விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டி பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
இரு அணிகளும் தோல்விக்கு பிறகு மோதுவதால் வெற்றிப் பாதைக்கு திறம்ப அணியில் மாற்றங்களைச் செய்து இருந்தது. குஜராத் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினார். அதேபோல், அந்த அணியில் உள்ள அனுபவ பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா ப்ளேயிங் லெவனில் இடம் பிடித்தார். அதேபோல் பஞ்சாப் அணியில் கடந்த போட்டிகளில் வெளியில் அமரவைக்கப்பட்ட ரபாடா இம்முறை அணியில் சேர்க்கப்பட்டார்.
இதன் படி பேட்டிங்கைத் தொடங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த அணி ரன் கணக்கை தொடங்கும் முன்னரே தொடக்க வீரர் ப்ராப் சிம்ரன் தனது விக்கெட்டை முகமது ஷமி பந்து வீச்சில் இழந்தார். இதனால் அந்த அணி தடுப்பாட்டத்தில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷிகர் தவானுடன் கைகோர்த்த மேத்யூவ் ஷார்ட் அடித்து ஆடினார். இதனால் பஞ்சாப் அணியின் ரன்ரேட் சீராக உயர்ந்தது. பவர்ப்ளேவிற்குப் பிறகு ஆட்டத்தில் குஜராத் அணியின் ஆதிக்கம் இருந்ததால், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாருக்கான் சிக்ஸர்கள் பறக்கவிட்டதால் 150 ரன்களைக் கடக்க உதவியது. குஜராத் அணியைப் பொறுத்தவரையில் மொகித் சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி பவர்ப்ளேவில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. அதிரடியாக ஆடிவந்த விரத்திமான் சஹா தனது விக்கெட்டை ரபாடாவிடம் இழந்தார். இந்த விக்கெட் ஐபிஎல் தொடரில் ரபாடாவின் 100வது விக்கெட் ஆகும். சஹா விக்கெட்டை இழந்த பிறகும் கில் தனது அதிரடி ஆட்டத்தினை குறைக்கவில்லை. பவ்ர்ப்ளே முடிந்த பிறகு போட்டி மெல்ல மெல்ல பஞ்சாப் கைகளுக்கு வந்தது. தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை என்றாலும், கட்டுக்கோப்பாக வீசினார்.
தொடக்கம் முதல் ஆடிவந்த கில் 40 பந்தில் தனது அரை சதத்தினை எட்டினார். இறுதியில் 24 பந்தில் 34 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. நிலைத்து நின்று ஆடிக்கொண்டு இருந்த சுப்மன் கில் வெற்றியையும் பெற்றுத் தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 20வது ஓவரின் இரண்டாவது பந்தில் க்ளீன் போல்ட் ஆனார். அவர் 49 பந்தில் 67 ரன்கள் சேர்த்து இருந்தார். இதில் 7 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். 20வது ஓவரின் ஐந்தாவது பந்தில் குஜராத் அணி 4விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.