GT vs SRH, IPL 2023: குஜராத்தில் சதம் விளாசிய சுப்மன் கில்.. கடைசியில் கம்பேக் கொடுத்த ஐதராபாத்திற்கு 189 ரன்கள் இலக்கு
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் சீசன்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 61 லீக் போட்டிகள் முடிந்த பிறகும் இதுவரை எந்தவொரு அணியும் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. முன்னணியில் இருந்த குஜராத் மற்றும் சென்னை அணிகள் கூட தோல்வியை சந்தித்து தனக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் தான் இன்று நடைபெறும் லீக் போட்டி, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இன்றைய லீக் போட்டியில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை, மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நடப்பு தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக குஜராத் இருக்கும். அதேநேரம், புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் ஐதராபாத் அணி, மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இதன் காரணமாக வாழ்வா, சாவா எனும் சூழலில் இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி களமிறங்கியுள்ளது.
சுப்மன் கில் அதிரடி:
குஜராத்தின் தொடக்க ஆட்டக்காரரான விரிதிமான் சாஹா, 3 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதேநேரம், மறுமுனையில் சக தொடக்க வீரரான சுப்மன் கில், தமிழக வீரரான சாய் சுதர்ஷனுடன் சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த கூட்டணி வீசப்படும் அனைத்து ஓவர்களிலும் தொடர்ந்து பவுண்டரிகளை விளாசியாது. குறிப்பாக சுப்மன் கில் விரைவாக ரன் குவித்தார். இதன் மூலம் வெறும் 22 பந்துகளிலேயே தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதனால், இந்த கூட்டணி 57 பந்துகளிலேயே 103 ரன்களை சேர்த்து அசத்தியது. தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாண்ட்யா, வெறும் 8 ரன்களுக்கு நடையை கட்டினார்.
கில் - சுதர்ஷன் கூட்டணி:
சுப்மன் கில் மற்றும் சுதர்ஷன் கூட்டணியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் அணி கடுமையாக போராடியது. அவர்களை பிரிக்க எடுத்த பல்வேறு முயற்சிகளும், அவர்களுக்கு எதிராகவே அமைந்தது. பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரிக்கொடுத்தனர். தொடர்ந்து 36 பந்துகளில் 47 ரன்களை சேர்த்து இருந்தபோது, ஜான்சென் பந்துவீச்சில் சுதர்ஷன் ஆட்டமிழந்தார். இந்த கூட்டணி 2வது விக்கெட்டிற்கு 147 ரன்களை குவித்தது.
சதம் விளாசிய கில்:
மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சுப்மன் கில், ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை 56 பந்துகளில் பூர்த்தி செய்தார். தொடர்ந்து 101 ரன்கள் சேர்த்து இருந்தபோது அவர் ஆட்டமிழந்தார். இதனிடையே, கேப்டன் பாண்ட்யா 8 ரன்களிலும், அதிரடி ஆட்டக்காரரான மில்லர் 7 ரன்களிலும், திவேதியா 3 ரன்களிலும், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரஷித் கான், நூர் அகமது மற்றும் ஷமி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
ஐதராபாத்திற்கு இலக்கு:
இதன் மூலம் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களை குவித்தது. ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த இலக்கை ஐதராபாத் அணி எட்டுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.