IPL 2023: ஐபிஎல் தொடர் படைத்த புதிய வரலாறு... நேற்று மட்டும் இத்தனை சாதனைகளா? ஒரு பார்வை!
ஐபிஎல் தொடரில் நான்கு இன்னிங்ஸ்களிலும் 200+ ரன்களை கண்ட முதல் நாளாக நேற்றைய நாள் அமைந்தது.
ஐபிஎல் தொடரின் 999வது மற்றும் 1000வது போட்டியானது கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேற்று மிகப்பெரிய விருந்து படைத்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 827 ரன்கள் குவிக்கப்பட்டது. நான்கு 200+ ஸ்கோர்கள்.. இதுகுறித்த புள்ளி விவரங்கள் ஒரு பார்வை!
4 இன்னிங்ஸிலும் 200 ரன்கள்:
ஐபிஎல் தொடரில் நான்கு இன்னிங்ஸ்களிலும் 200+ ரன்களை கண்ட முதல் நாளாக நேற்றைய நாள் அமைந்தது. நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 200 ரன்கள் குவித்தது. இதை வெற்றி இலக்காக துரத்திய பஞ்சாப் 201 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இரவு நடந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 213 ரன்களை விரட்டி வெற்றிபெற்றது.
மேன் ஆப் தி மேட்ச்:
நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த அணி வீரர்களுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் ஒரே நாளில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறை.
கடந்த மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த அணி வீரர்களுக்கு ஆட்டநாயகன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 40வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி வீரர் மிட்செல் மார்ஷ் வாங்கினார். 41 & 42வது ஆட்டத்தில் டெவோன் கான்வே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வாங்கினார்.
அதிகபட்ச சேஸிங்:
மும்பை அணி எட்டிய 213 ரன் இலக்கானது ஐபிஎல் அரங்கில் இந்த மைதானத்தில் துரத்தப்பட்ட முதல் 200+ இலக்காகும். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிராக 200க்கு மேல் இலக்கை துரத்திய முதல் அணி என்ற பெருமையையும் மும்பை பெற்றுள்ளது. இதற்கு முன் 2019ல் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 199 ரன்களை விரட்டி வெற்றிபெற்றது.
இளம் வயதில் சதம்:
மும்பை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ராஜஸ்தான் அணிக்காக இளம் வயதில் சதம் அடித்த பெருமையும், ஒட்டு மொத்தமாக ஐபிஎல் தொடரில் 4வது இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக ஜோஸ் பட்லருடன் இணைந்து ஜெய்ஸ்வால் 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
ஒரு இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார் ஜெய்ஸ்வால். இவர் மொத்தமாக 24 பந்துகளை எல்லைக்கு அனுப்பினார். இதற்கு முன்னதாக 30 பந்துகளை எல்லைக்கு அனுப்பி கெயில் முதலிடத்தில் உள்ளார்.
ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 124 ரன்களில் 112 ரன்களை பவுண்டரிகள் வழியாக எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு இரண்டாவது அதிவேக சதம். 2010ல் மும்பை அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணிக்காக ஆடிய யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்தார்.
பிறந்தநாளில் சொதப்பும் ரோகித் சர்மா:
ஐபிஎல் தொடரில் இதுவரை தனது பிறந்தநாளில் 4 முறை விளையாடியுள்ள ரோகித் சர்மா ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
- 2009 - டெல்லிக்கு எதிராக 17 (20)
- 2014- ஹைதராபாத் எதிராக 1(5)
- 2022- ராஜஸ்தான் எதிராக 2(5)
- 2023 - ராஜஸ்தான் எதிராக 3(5)
ரோகித் சர்மாவிற்கு கேப்டனாக இது 150வது போட்டியாகும். எம்எஸ் தோனி இதுவரை ஐபிஎல் தொடரில் 219 போட்டிகளில் அணிகளுக்கு தலைமை தாங்கி முதலிடத்தில் உள்ளார்.