DC vs KKR, IPL 2023: டெல்லி - கொல்கத்தா இன்று மோதல்.. 5 தோல்வி; முதல் வெற்றியை பெறுமா வார்னர் படை..?
ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.
ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.
டெல்லி - கொல்கத்தா மோதல்:
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில், வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்ள உள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம்.
கொல்கத்தா அணி நிலவரம்:
கொல்கத்தா அணி நடப்பு தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்ற கொல்கத்தா கடைசி இரண்டு போட்டிகளில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளிடம் தோல்வியை தழுவியது. இதனால், மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப கொல்கத்தா அணி முனைப்பு காட்டி வருகிறது. குர்பாஸ், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், நிதிஷ் ராணா ஆகியோர் பேட்டிங்கிலும், நரைன் மற்றும் வருண் சகரவர்த்தி ஆகியோர் பந்துவீச்சிலும் கொல்கத்தா அணியின் நட்சட்திர வீரர்களாக உள்ளனர்.
டெல்லி அணி நிலவரம்:
கடந்த தொடரில் மும்பை அணி எதிர்கொண்ட மோசமான சூழலில் தான், நடப்பாண்டில் டெல்லி அணி உள்ளது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் அந்த அணி தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கேப்டன் வார்னர் மற்றும் துணை கேப்டன் அக்சர் படேல் மட்டுமே, டெல்லி அணியின் ஒரே நம்பிக்கையாக உள்ளனர். பிரித்வி ஷா நடப்பு தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். உள்ளூர் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியின் மூலமாவது டெல்லி அணி வெற்றி கணக்கை தொடங்குமா என்பதை பொருத்து இருந்துதான் காண வேண்டும்.
மைதானம் எப்படி?:
அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில், மைதானம் குறைந்த வேகத்தில் வீசும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. டெல்லியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கையே விரும்பும். அதேநேரம், போட்டியின் பின்பகுதியில் ஏற்படும் பனிப்பொழிவு பந்துவீச்சாளர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் சூழல் உள்ளது.
சிறந்த பேட்ஸ்மேன் : இன்றைய போட்டியில் கொல்கத்தாவின் வெங்கடேஷ் அய்யர் சிறந்த பேட்ஸ்-மேன் ஆக திகழ வாய்ப்பு உள்ளது
சிறந்த பந்துவீச்சாளர்: இன்றைய போட்டியில் கொல்கத்தாவின் சுயாஷ் சர்மா அதிக விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்பு
வெற்றி வாய்ப்பு யாருக்கு? : கொல்கத்தா அணி வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம்