MI vs CSK, Match Highlights: ரகானே மிரட்டல்..மும்பையை புரட்டிப்போட்ட சென்னை.. 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கான்வே டக்-அவுட்:
மும்பை அணி நிர்ணயித்த 158 ரன்கள் எனும் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரரான கான்வே பெஹ்ரண்ட்ரோப் வீசிய போட்டியின் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார்.
அதிவேக அரைசதம்:
2வது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரகானே மும்பை அணியின் பந்துவீச்சை மைதானங்களின் அனைத்து பக்கங்களிலும் ஓடவிட்டார். போட்டியின் 4வது ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட 23 ரன்களை விளாசினார். இதன் மூலம் 19 பந்துகளிலேயே அரைசதம் கடந்து, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர் எனும் பெருமையை ரகானே பெற்றார். முன்னதாக பெங்களூரு அணிக்கு எதிராக கொல்கத்தா வீரர் ஷர்தூல் தாக்கூர் 20 பந்துகளில் அரைசதம் கடந்ததே சாதனையாக இருந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரகானே 27 பந்துகளில் 61 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.
நிதான ஆட்டம்:
மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து ஷிவம் துபே பொறுப்புடன் விளையாடி சென்னை அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். இந்த ஜோடி 3வது விக்கெட்டிற்கு 43 ரன்களை சேர்த்தது. ஷிவம் துபே 28 ரன்களை சேர்த்து இருந்தபோது, கார்த்திகேயா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காத ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களை எடுத்தார். இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அம்பத்தி ராயுடு 20 ரன்களை சேர்த்தார்.
சென்னை அணி வெற்றி:
இதன் மூலம் 18.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்கை எட்டியது. நடப்பு தொடரில் சென்னை அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். அதேநேரம், நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை கண்டுள்ளது.
முதல் இன்னிங்ஸ் விவரம்:
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே இந்த ஜோடி 10 ரன்களை சேர்த்தது. இதனிடையே, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சாஹர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதைதொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோகித் - இஷான் ஜோடி முதல் விக்கெட்டிற்கு, 38 ரன்களை சேர்த்தது. ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்து இருந்தபோது, தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சுழலில் சுருட்டிய சென்னை:
அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் 5 பவுண்டரிகள் உட்பட 32 ரன்கள் சேர்த்தபோது, ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, சென்னை அணி இருமுனையில் இருந்தும் ஜடேஜா மற்றும் சாண்ட்னரை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதை எதிர்கொள்ள முடியாமல் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், கேமரூன் கிரீன் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதோடு, இளம் வீரர் அர்ஷத் கானும், 2 ரன்களில் நடையை கட்டினார். இதனால், 76 ரன்களை சேர்ப்பதற்குள் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிதானமாக விளையாடி வந்த திலக் வர்மா, 22 ரன்களை சேர்த்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த ஸ்டப்ஸ் 10 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்களை மட்டுமே எடுத்து நடையை கட்டினார். இறுதிகட்டத்தில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 31 ரன்களை சேர்த்தார்.
சென்னை அணிக்கு ரன்கள் இலக்கு:
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், சாண்ட்னர் மற்றும் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.