RCB vs SRH: டூபிளசிஸ் - பட்டிதார் அதிரடி.. கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் அசத்தல்! ஆர்சிபி அணி 192 ரன்கள் !
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 192 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் டூபிளசிஸ் களமிறங்கினர்.
சன்ரைசர்ஸ் அணியில் முதல் ஓவரை சுச்சித் வீசினார். அவர் வீசிய முதல் பந்தில் விராட் கோலி கேன் வில்லியம்சன் இடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் அவுட்டாகினார். இதன்மூலம் நடப்புத் தொடரில் அவர் 3-வது முறையாக கோல்டன் டக் அவுட்டாகினார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ராஜாட் பட்டிதார் மற்றும் கேப்டன் டூபிளசிஸ் அசத்தினார். இருவரும் அதிரடியாக விளையாடி பெங்களூரு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்காரணமாக முதல் 10 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டூபிளசிஸ் 34 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறுமுனையில் அரைசதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜாட் பட்டிதார் 38 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் விளாசி சுச்சித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மேக்ஸ்வேல் கேப்டன் டூபிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆர்சிபி அணி 18 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.
ஆட்டத்தின் 19வது ஓவரை கார்த்திக் தியாகி வீசினார். அந்த ஓவரில் அதிரடி வீரர் மேக்ஸ்வேல் 24 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் விளாசி 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார். அவர் 8 பந்துகளில் 4 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி 30 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 192 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் டூபிளசிஸ் 50 பந்துகளில் 73* ரன்கள் எடுத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்