CSK vs PBKS: ராயுடு ஆட்டம் வீண்; ரபாடா,அர்ஷ்தீப்,ரிஷி அபாரம்- சிஎஸ்கேவை மீண்டும் வீழ்த்திய பஞ்சாப் !
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடப்புத் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 88* ரன்கள் எடுத்தார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் 188 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் உத்தப்பா 1 ரன்னில் வெளியேறினார். அதன்பின்னர் வந்த மிட்சல் சாண்டனர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஃபார்மில் இருந்த சிவம் துபேவும் 8 ரன்களில் ரிஷி தவான் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இதனால் சென்னை அணி 7 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்தது.
அதன்பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராயுடு அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். 12 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 84 ரன்கள் எடுத்தது. 13ஆவது ஓவரில் ரபாடா பந்துவீச்சில் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். எனினும் ராயுடு தொடர்ந்து அதிரடி காட்டி வந்தார். அவர் 28 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இருப்பினும் சென்னை அணி வெற்றி பெற கடைசி 5 ஓவர்களில் 70 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தின் 16ஆவது ஓவரை சந்தீப் சர்மா வீசினார். அந்த ஓவரில் ராயுடு 3 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என மொத்தமாக 23 ரன்கள் விளாசினார். இதன்காரணமாக கடைசி 4 ஓவர்களில் சென்னை வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது.
சிறப்பாக விளையாடி வந்த ராயுடு 6 சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகள் விளாசி 39 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 18ஆவது ரபாடாவும், 19ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங்கும் சிறப்பாக வீசினர். இதனால் சென்னை அணி கடைசி ஓவரில் வெற்றி பெற 27 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் பந்தில் சிக்சர் அடித்த தோனி இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 176 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. நடப்புத் தொடரில் சென்னை அணியை பஞ்சாப் அணி இரண்டாவது முறையாக வீழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்