SRH vs GT: உம்ரான் மாலிக் 5 விக்கெட் வீண்... கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ரஷீத்- குஜராத் அசத்தல் வெற்றி !
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் கேன் வில்லியம்சன் களமிறங்கினர். அபிஷேக் சர்மா(65) மற்றும் மார்க்கரம்(56) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து 196 ரன்கள் என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹா தொடக்க முதலே அதிரடி காட்டினார். இதன்காரணமாக முதல் 6 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் 16 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களில் உம்ரான் மாலிக் வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
இதன்காரணமாக 10 ஓவர்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி வந்த சாஹா 28 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 38 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசி 68 ரன்கள் எடுத்திருந்த போது உம்ரான் மாலிக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் மில்லர் 17 ரன்களுக்கும், அபினவ் ரன் எதுவும் எடுக்காமலும் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால் ஐபிஎல் வரலாற்றில் உம்ரான் மாலிக் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
16 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. குஜராத் அணி வெற்றி பெற 24 பந்துகளில் 56 ரன்கள் தேவைப்பட்டது. அதன்பின்னர் ராகுல் திவாட்டியா அதிரடி காட்ட தொடங்கினார். கடைசி ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் பந்தில் ராகுல் திவாட்டிய ஒரு சிக்சர் விளாசினார். அதைத் தொடர்ந்து ரஷீத் கான் மூன்று சிக்சர்கள் விளாசினார். 20 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 199 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்