PBKS vs GT, Match Highlights: கடைசி 2 பந்தில் 2 சிக்ஸ்..! தோல்வியின் விளிம்புக்கு சென்று வெற்றி பெற்ற குஜராத்..! ராகுல் திவாட்டியா அபாரம்..!
IPL 2022, PBKS vs GT: பஞ்சாப் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ராகுல் திவாட்டியா கடைசி 2 பந்தில் அடித்த கடைசி 2 சிக்ஸரால் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
மும்பையில் நடைபெற்ற போட்டியில் குஜராத்திற்கு எதிராக முதலில் ஆடிய பஞ்சாப் அணி லிவிங்ஸ்டன் அதிரடி, ராகுல் சாஹர் இறுதிக்கட்ட பேட்டிங்கால் 189 ரன்களை குவித்தது. இதையடுத்து, 190 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். சுப்மன் கில் பவுண்டரிகளாக பவர்ப்ளேவில் விளாசினார். ஆனால், மற்றொரு தொடக்க வீரர் மேத்யூ வேட் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து, சுப்மன் கில்லுடன் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார்.
சுப்மன் கில் – சாய் சுதர்சன் ஜோடி சரமாரியாக ரன்களை விளாசினர். குறிப்பாக சுப்மன்கில் மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகளாக விளாசினார். இதனால், அவர் 29 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். அவருக்க நல்ல ஒத்துழைப்பு அளித்த தமிழக வீரர் சாய் சுதர்சனும் ஏதுவான பந்துகளை பவுண்டரிகளுக்கு விளாசினார். இதனால், 10 ஓவர்களில் குஜராத் அணி 100 ரன்களை தொட்டது.
அரைசதம் கடந்தும் சுப்மன்கில் தொடர்ந்து தனது நேர்த்தியான பேட்டிங்கை செய்தார். இதனால், சுப்மின்கில் – சாய்சுதர்சன் பார்ட்னர்ஷிப் 2வது விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்தது. அப்போது, ராகுல் சாஹர் பந்தில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் 30 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச்சாகி அவுட்டானார். பின்னர், குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். அவரும் களமிறங்கியது முதல் அதிரடியாக ஆட முயற்சித்தார்.
ஆனால், பஞ்சாப் வீரர்கள் நேர்த்தியாக பந்துவீசியதால் சுப்மன் கில் – ஹர்திக் பாண்ட்யா இருவராலும் கடைசி கட்டத்தில் பவுண்டரிகள் விளாச இயலவில்லை. இதனால், கடைசி 12 பந்தில் குஜராத் வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா வீசிய 19வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விளாசிய நிலையில், அந்த ஓவரில சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்ஸருடன் 96 ரன்களை எடுத்து வெளியேறினார். இதனால், கடைசி 6 பந்தில் 19 ரன்கள் தேவைப்பட்டது.
ஓடீன் ஸ்மித் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலே ஹர்திக் பாண்ட்யா ரன் அவுட்டானார். மூன்றாவது பந்தை மில்லர் பவுண்டரிக்கு விளாசினார். நான்காவது பந்தில் ஒரு ரன் வந்தது. கடைசி 2 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தை ராகுல் திவாட்டியா சிக்ஸருக்கு அனுப்பினார். இதனால், 1 பந்தில் 6 ரன் என்ற பரபரப்பு ஏற்பட்டது. கடைசி பந்தையும் ராகுல் திவாட்டியா சிக்ஸர் அடித்து குஜராத்தை திரில் வெற்றி பெறவைத்தார். ராகுல் திவாட்டியா 3 பந்தில் 2 சிக்ஸருடன் 13 ரன்களுடனும், டேவிட் மில்லர் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ராகுல் சாஹர் 4 ஓவர்களில் 41 ரன்களையும், ஓடீன் ஸ்மித் 3 ஓவர்களில் 35 ரன்களையும் வாரி வழங்கினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்