IPL 2022: ஜாகிர் கான் டூ உமேஷ் யாதவ்.. ஐபிஎல் பவர்ப்ளே ஓவர்களில் பவராக விக்கெட் வீழ்த்திய வீரர்கள்!
ஐபிஎல் தொடரில் பவர்ப்ளே ஓவர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?
ஐபிஎல் 2022ஆம் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் உமேஷ் யாதவின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் ரஸலின் அதிரடி பேட்டிங் காரணமாக கொல்கத்தா அணியை போட்டியை வென்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் பவர்ப்ளேவில் விக்கெட் எடுத்ததன் மூலம் உமேஷ் யாதவ் ஒரு சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். அது என்ன பட்டியல்?
ஐபிஎல் வரலாற்றில் பவர்ப்ளேவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் உமேஷ் யாதவ் நான்காவது இடைத்தை பிடித்துள்ளார். இந்தச் சூழலில் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார் யார்?
உமேஷ் யாதவ்- 50*
நேற்றைய போட்டியில் பவர்ப்ளேவில் விக்கெட் எடுத்ததன் மூலம் பவர்ப்ளேவில் 50 விக்கெட்களுக்கு மேல் எடுத்த 4ஆவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
புவனேஷ்வர் குமார்-51
ஐபிஎல் தொடரில் பவர்ப்ளேவில் சிறப்பாக பந்துவீசும் ஸ்விங் பவுலர்களில் ஒருவர் புவனேஷ்வர் குமார். இவர் தற்போது வரை பவர்ப்ளே ஓவர்களில் 51 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
சந்தீப் சர்மா-52
ஸ்விங் பந்துவீச்சில் கலக்கி வரும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா. இவர் தற்போது வரை நடைபெற்றுள்ள ஐபிஎல் போட்டிகளில் பவர்ப்ளேவில் 52 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.
ஜாகிர் கான்- 52
இந்திய அணியின் ஜாம்பவான் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஜாகிர் கான். இவர் ஐபிஎல் தொடரிலும் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சை தொடர்ந்திருந்தார். ஐபிஎல் வரலாற்றில் பவர்ப்ளேவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 52 விக்கெட்களுடன் இவர் முதலிடத்தில் உள்ளார். இவருடன் சந்தீப் சர்மாவும் சேர்ந்து முதலிடத்தில் உள்ளார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் ஜாகிர் கான் விளையாடுவதில்லை என்பதால் இந்தப் பட்டியலில் விரைவில் சந்தீப் சர்மா முதலிடத்தை தன்வசம் வைத்து கொள்ள போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை தவிர நேற்றைய போட்டியில் உமேஷ் யாதவ் மேலும் ஒரு சிறப்பான சாதனையை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்கு எதிராக அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். உமேஷ் யாதவ் பஞ்சாப் அணிக்கு எதிராக இதுவரை 6 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்கு எதிராக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள்:
6 முறை- உமேஷ் யாதவ் vs பஞ்சாப்
5 முறை- யூசஃப் பதான் vs டெக்கான் சார்ஜர்ஸ்
5 முறை- ரோகித் சர்மா vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
5 முறை- கிறிஸ் கெயில்vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்