CSK VS SRH : சென்னை அணிக்கு நான்காவது தோல்வி..! வெற்றிக்கணக்கை தொடங்கிய ஹைதராபாத்..!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
சென்னை அணி நிர்ணயித்த 155 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் சன்ரைசர்ஸ் அணி தொடக்கம் முதலே நிதானமாக ஆடினர். இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கிய அபிஷேக் சர்மாவும், கேப்டன் வில்லியம்சனும் தொடக்கத்தில் நிதனாமாக ஆட்டத்தை தொடங்கினர். பின்னர், அபிஷேக் சர்மா அதிரடிக்கு மாறினார். அவர் அளித்த எளிதான கேட்ச் வாய்ப்புகளை சென்னை வீரர்கள் தவறவிட்டனர். ஓரிரு ரன்களாக எடுத்த அவர்கள் ஏதுவான பந்துகளை சிக்ஸர்களுக்கும், பவுண்டரிக்கும் விளாசினர். இதனால், ஹைதராபாத் அணி 8 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது.
அபிஷேக் சர்மா அதிரடியாகவும், கேப்டன் வில்லியம்சன் நிதானமாகவும் ஆட சன்ரைசர்சின் ஸ்கோர் சரியான விகிதத்தில் ஏறத்தொடங்கியது. இதனால், 10 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்தது. இளம் வீரர் அபிஷேக் சர்மா தொடர்ந்து அதிரடியாக ஆடியதால் அவர் 32 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இதனால், சன்ரைசர்ஸ் அணி 12 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்தது. முகேஷ் சவுத்ரி பந்தில் கேப்டன் வில்லியம்சன் 40 பந்தில் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய திரிபாதி அபிஷேக் சர்மாவுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இதனால், 14வது ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை கடந்தது. 36 பந்துகளில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. அபிஷேக் சர்மாவும், ராகுல் திரிபாதியும் தொடர்ந்து அதிரடியாக ஆடியதால் சென்னை வீரர்கள் தடுமாறினர். குறிப்பாக, ராகுல் திரிபாதி பவுண்டரியாகவும் ஏதுவான பந்தை சிக்ஸருக்கு அனுப்பியும் விளாசினார்.
இதனால், கடைசி 18 பந்தில் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது, அபிஷேக் சர்மா ப்ராவோ பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 75 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களில் வெற்றிக்கான இலக்கை சன்ரைசர்ஸ் அணி வீரர் ராகுல் திரிபாதி அடித்து சன்ரைசர்ஸ் அணிக்கான முதல் வெற்றியை பெற்றுத்தந்தார். ராகுல் திரிபாதி 15 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 39 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த வெற்றி மூலம் சன்ரைசர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி 9வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
சென்னை அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்